முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் 2030-க்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் வகையில் தமிழ்நாடு அரசு அதற்கான திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளில் நடந்த தொழிற்துறை கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் தொழில்களைத் தொடங்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து தான் நேற்றும் இன்றும் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.
நேற்று முதல் நாளிலேயே ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்து தமிழ்நாடு வரலாற்றிலேயே தொழில்துறை வளர்ச்சியில் இதுவரை காணாத மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாக நடத்தி வரும் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்குத் தொழில் முனைவோர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அதற்கு முன்பு அ.தி.மு.க ஆட்சியில் நடந்த இரண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கும் தற்போது தி.மு.க அரசு மிகச் சிறப்பாக நடத்தி வரும் இந்த முதலீட்டாளர் மாநாட்டிற்கும் அப்படி என்ன வேறுபாடுகள் உள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதைநாம் இங்கே பார்ப்போம்.
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நத்தியுள்ளனர். இப்படி இரண்டு மாநாடுகள் நடத்தினாலும் ரூ. 5 லட்சம் கோடிக்கு மட்டுமே முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களே கையெழுத்தாகி உள்ளது. அதிலும், பல ஒப்பந்தங்கள் கைவிடப்பட்டுள்ளது. மேலும் சில ஒப்பந்தம் இன்றைய தினம் வரை கூட முழுமையாகச் செயல்பாட்டுக்கு வராதநிலை தான் உள்ளது.
2015ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.2.4 லட்சம் கோடிக்கு முதலீடுகள் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரூ. 65 ஆயிரம் கோடிக்கான முதலீடுகளே, செயல்முறைக்கு வரப்பெற்றது. அதேபோல் 4.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் 1.8 லட்சம் வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டது.
பின்னர் 2019 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் ரூ. 3 லட்சம் கோடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் ரூ. 1.1 லட்சம் கோடியே முதலீடு செய்யப்பட்டது. மேலும் 10.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டது என கூறப்பட்ட நிலையில் 1.03 லட்சம் வேலைவாய்ப்புகளே கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த அதிர்ச்சி தகவல்கள் (RTI) தகவல் அறியும் சட்டத்தின் வழி வெளிவந்துள்ளது.அப்படி அதிமுக அரசு எந்த திட்டமும், தொலைநோக்கு பார்வையும் இல்லாமல்தான் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியுள்ளனர்.
ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு 2023க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைத் தமிழ்நாடு எட்டும் என்ற லட்சியத்தை அறிவித்து அதற்கான இலங்கை நோக்கி திட்டங்களை வகுத்துச் செயல்பட்டு வருகிறது.
அதனால்தான், இரண்டு ஆண்டுகளில் ரூ. 3 லட்சம் கோடி முதலீட்டில், 4 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகளை உறுதி செய்துள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்த்தார்.
அதன் அடுத்தகட்டமாகத்தான் சென்னையில் இரண்டு நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாடு தொடங்கி வைத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல்நாளே ரூ.5.5 லட்சம் கோடிக்கு முதலீடுகள் குவிந்துள்ளது. அதேபோல் இன்றும் பல நிறுவனங்களுடன் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகிறது. இதன் மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- செந்நாமணி