தமிழ்நாடு

வெள்ள பாதிப்பு : தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து கூடுதலாக ரூ. 1000 கோடி நிவாரண உதவி - சிபிஎம் வரவேற்பு !

வெள்ள பாதிப்பு : தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து கூடுதலாக ரூ. 1000 கோடி நிவாரண உதவி - சிபிஎம் வரவேற்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், மூர்த்தி, மனோ தங்கராஜ் ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுபட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்கள். அதேபோல் 10-க்கும் மேற்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட அனுப்பிவைக்கப்பட்டனர்.

முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள், குறிப்பாக குடிநீர் மற்றும் மின்சார வசதி வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் தற்காலிக அடிப்படையில் சரிசெய்யப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள் மற்றும் மின் துறை, நகராட்சித் துறைப் பணியாளர்கள்ஒருங்கிணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிரமாகக் களப் பணியாற்றினார்கள்.

வெள்ள பாதிப்பு : தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து கூடுதலாக ரூ. 1000 கோடி நிவாரண உதவி - சிபிஎம் வரவேற்பு !

இந்தச் சூழ்நிலையில், கடந்த 21-ம் தேதி அன்று தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளுக்குக் கூடுதலாக, அவர்களுடைய பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் நேற்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டன.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளை பெற்றதோடு அரசியல் தலைவர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் இதுகுறித்து சிபிஐ(எம்) கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கனவே பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு வழங்கி வரும் நிலையில் தற்போது கூடுதலாக தமிழக அரசின் நிதியிலிருந்து ரூ.1000 கோடி நிவாரண உதவிகள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு நிதி ஏதும் வழங்காத நிலையில் முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பு பாராட்டுக்குரியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இதனை வரவேற்கிறது. மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அருகமை மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன. இந்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குள் தென்மாவட்டங்களில் பெய்த அதி கனமழையின் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்புகளுக்குள்ளாகின. அனைத்தையும் இழந்து மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

வெள்ள பாதிப்பு : தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து கூடுதலாக ரூ. 1000 கோடி நிவாரண உதவி - சிபிஎம் வரவேற்பு !

தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் மற்றும் நிவாரண உதவிகள் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பேருதவியாக அமைந்தன. ஒன்றிய அரசு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதல் நிதி ஒதுக்கும் பட்சத்தில் நிவாரண உதவிகளை, உதவித் தொகைகளை மேலும் அதிகரித்திட வாய்ப்புகள் ஏற்படும்.

தமிழக முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் மறு கட்டமைப்பு பணிகளை சீர் செய்திட ரூ.21 ஆயிரம் கோடி தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஒதுக்கிட வேண்டுமென வலியுறுத்தினார். ஆனால், இதுகாறும் ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் தமிழகத்தையும், தமிழக மக்களையும் வஞ்சித்து வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வரும் சூழலில், கடுமையான பாதிப்புகளை கணக்கில் கொண்டு தற்போது வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடு கட்டவும் - புனரமைக்கவும், பயிர் சேதங்களுக்கும், கால்நடை உயிரிழப்புகளுக்கும், சிறு வணிகர்கள், சாலையோர வியாபாரிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் - முனைவோர்கள், சுய உதவிக்குழுக்கள், மீனவர்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள், உப்பளங்கள் என பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகளும், குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கும், மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை அரசே மேம்படுத்தி தருவதற்கும் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு பேருதவியாக அமையும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழகத்திற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்திடுக!

ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தின் மீது கொண்டுள்ள வஞ்சகப் போக்கை கைவிட்டு, வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு கோரியுள்ள ரூ. 21 ஆயிரம் கோடி நிதியினை உடனடியாக வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 3, 2024 அன்று சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு நடைபெறும் முற்றுகைப் போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

banner

Related Stories

Related Stories