சென்னை, அடையாறு, தரமணி 100 அடி சாலையில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் ஒவ்வொரு பருவ மழைக்கு பின்னரும், பெரிய அளவிலான மழை நோய் பாதிப்பு ஏற்படுவது வழக்கும், அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வடகிழக்கு பருவ மழை தொடங்கியதுமே, குறிப்பாக அக்டோபர் திங்கள் 29 ஆம் தேதியில் இருந்து, வாரத்திற்கு 1000 முகாம்கள் திட்டமிடப்பட்டு, 10 வாரங்களில் 10,000 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடைபெற தொடங்கியது. இன்று 10வது வாரமாக மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 23,315 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா, சிக்கன் குனியா போன்ற காய்ச்சல் பாதிப்புகளில் இருந்து, பொது மக்களை காக்க இந்த முகாம்கள் பயன் தந்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலின் பாதிப்புகளில் இருந்து பொது மக்களை காக்க, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு மருத்துவ முகாம்கள் ஒரு வாரமாக நடைபெற்றது. அந்த வகையில் 13,482 முகாம்கள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து அதிகனமழை பொழிவால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும், 17.12.2023 அன்று முதல் நேற்று வரை 6,635 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆக மொத்தம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 43,432 மருத்துவ முகாம்கள் கடந்த 2 மாதங்களாக நடத்தப்பட்டு 21,79,991 பொது மக்கள் பயம்பெற்றுள்ளனர்.
மருத்துவத்துறை வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாகும். இவ்வளவு அதிகமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதன் விளைவாக பொதுமக்கள் மழைக்கால நோய் பாதிப்புகளில் இருந்து காக்கப்பட்டுள்ளனர். 6635 முகாம்கள் பெருமழையினால் அதிகம் பாதிக்கப்பட்ட தென்மாநிலங்களில் நடத்தப்பட்டிருந்தாலும், அதிகம் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 2,516 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.