அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் 6-வது உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த நவ.10 முதல் 17 (இன்று) வரை நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில், இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், சென்னை புது வண்ணாரப்பேட்டை செரியன் நகரை சேர்ந்த வீராங்கனை காசிமா (17), மகளிர் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என 3 பிரிவுகளிலும் தங்கம் என்று சாதனை புரிந்து சாம்பியன் ஆகியுள்ளார். இவரின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் ஆவார். போட்டி நிறவடைந்த நிலையில், வரும் 21-ம் தேதி அமெரிக்காவில் இருந்து காசிமா பதக்கத்தோடு நாடு திரும்ப உள்ளார்.
இந்த போட்டிக்கு செல்லும் முன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சந்தித்தார். அப்போது வீராங்கனை காசிமா உள்ளிட்ட 4 வீராங்கனைகளுக்கும் பயணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக நிதி உதவியாக ரூ.1.5 லட்சம் பணத்தை ’தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை’ சார்பில் வழங்கி வீராங்கனைகள் வெற்றி பெற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
13 முறை தேசிய அளவிலும், 3 முறை உலக அளவிலும் வெற்றி பெற்ற ரேஷ்மி குமாரியை எதிர்த்து வெற்றி பெற்று, தற்போது சாம்பியன் ஆகியிருக்கும் வீராங்கனை காசிமாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :
அமெரிக்காவில் நடைபெற்ற ஆறாவது Carrom World Cup போட்டியில் சென்னையைச் சேர்ந்த நம் தமிழ்மகள் காசிமா 3 பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளதற்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள். பெருமை கொள்கிறேன் மகளே... எளியோரின் வெற்றியில்தான் திராவிட மாடலின் வெற்றி அடங்கியிருக்கிறது!
தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தங்கை காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் காசிமாவின் பயணம் - பயிற்சிக்காக ரூ.1.50 லட்சத்தை நாம் வழங்கி வாழ்த்தியிருந்த நிலையில், 3 தங்கப் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார். தங்கை காசிமாவின் வெற்றிப்பயணம் தொடரட்டும்!