சென்னை எண்ணூர் பகுதியில் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் கம்பெனியிலிருந்து அமோனியா எரிவாயு கசிவு ஏற்பட்டு அப்பகுதியில் வசிக்கக்கூடிய பெரிய குப்பம் சின்ன குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு கண் எரிச்சல் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதனை அறிந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, தீயணைப்பு துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக குழாயை சரி செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தால் 40க்கும் மேற்பட்டோர் அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரு சுதர்சனம், கே.பி.சங்கர், ஐட்ரீம் மூர்த்தி, மண்டல குழு தலைவர் தி.மு தனியரசு, பகுதி செயலாளர் வைமா அருள் தாசன் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவரிடம் கேட்டு அறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் அனைவரையும் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில், கோரமண்டல் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஏழு பேர் கொண்ட குழு, கோரமண்டல் நிறுவனத்தில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டு அமோனியம் வாயு கசிவு இல்லை என உறுதி செய்தனர். பின்னர் கோரமண்டல் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்படுவதாகவும் தொழிற்சாலை முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு அமோனியா பாதுகாப்பு மற்றும் குழாயின் பாதுகாப்பு தன்மை குறித்து உரிய ஆவணங்களை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உரிய நடவடிக்கையால் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட பெரிய குப்பம், சின்ன குப்பம் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், பர்மா நகர், உலகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.