முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த காரணத்தினால்தான் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருக்கக்கூடியவர்களை நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு போயிருக்கிறோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "அணையின் இருப்பை பொறுத்தமட்டில் முதல் நாளிலிருந்து எவ்வளவு கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்பதை நாங்கள் அறிவித்துக் கொண்டிருந்தோம். 45,000 கனஅடி தண்ணீர் வருகிறபோது, இது 1 இலட்சத்தை தொடும் என்பதையும், வெள்ளப் பெருக்கு வருகிறது என்பதை நாங்கள் குறுஞ்செய்தி மூலமாக அனைவருக்கும் முன்னரே தெரிவித்திருக்கிறோம். அதற்குப்பிறகு இரவு கடுமையாக, தொடர்ச்சியாக மழை வருகிறபோது 1 இலட்சம் கனஅடி அளவிற்கு தண்ணீர் வருகிறது. நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த காரணத்தினால்தான் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருக்கக்கூடியவர்களை நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு போயிருக்கிறோம். நீங்கள் குறிப்பிடுவதைப்போல, குற்றச்சாட்டு யார் வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் உண்மை நிலவரம் இதுதான்.
நீங்கள் சொல்வதைப் போல, கரையோர மக்களுக்கு எந்தவிதமான அறிவிப்பு இல்லாமல் இருந்திருந்தால், 1,45,000 கன அடி தண்ணீர் வருகிறபோது, எவ்வளவு பெரிய உயிரிழப்பு வந்திருக்கவேண்டும். நீங்களே பாருங்கள். நாங்கள் முன்னரே அறிவித்த காரணத்தால் தான் பல பேர் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக செய்தியாளர்கள் சந்திப்பில், முதல் நாள் இரவு அத்தனை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கறோம். இவ்வளவு கனஅடி தண்ணீர் வரப்போகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வரவேண்டும் என்பதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும் கேட்டிருந்தோம். காவல்துறை, தீயணைப்புத்துறையினர் அங்கிருந்து பலபேரை வெளியேற்றிய காரணத்தினால்தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி சிலர் அங்கே இருந்திருக்கிறார்கள். இருந்தவர்களையும் அடுத்த நாட்களிலிருந்து உங்களுக்கு தெரியும், படகுகளை பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்து, அவர்களை காப்பாற்றியிருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.