தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். இம்மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருநெல்வேலியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியது வருமாறு:-
இம்மாத தொடக்கத்தில், வரலாறு காணாத மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சந்தித்ததைப் போல, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களும் சந்தித்துள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்ட மக்களைக் காத்ததைப் போல, தூத்துக்குடி மற்றும் நெல்லையைச் சுற்றியிருக்கக்கூடிய மாவட்ட மக்களையும் தமிழ்நாடு அரசு காக்கும் என்ற உறுதியை நான் முதலில் அளிக்கிறேன்.
கடுமையான மழைப் பொழிவு 17 மற்றும் 18 தேதிகளில் ஏற்படும் என்பதை சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் 17-ஆம் தேதி அறிவித்தது. வானிலை ஆராய்ச்சி மையம் சொன்ன மழை அளவுகளுக்கு பல மடங்கு அதிகமாக மழைப் பொழிவு இருந்தது. இதனால் இந்த மாவட்டங்களில் வரலாற்றில் இதுவரை பதியப்படாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, காயல்பட்டினத்தில் 94 சென்டி மீட்டர் மழை. அந்தப் பகுதியே வெள்ளக்காடானது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்ததை எல்லாம் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.
ஒருசில இடங்களில், 1871-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதிக மழை பெய்துள்ளது. அதன்காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பல வட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியிருக்கக்கூடிய பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை நமக்கு சற்றே தாமதமாக கிடைத்தாலும், அதில் அளித்துள்ள அளவை விட அதிகமாக மழை பொழிவு ஏற்பட்ட சூழ்நிலையிலும், தமிழ்நாடு அரசு முன்கூட்டியே பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. மழைப்பொழிவு கடுமையான உடனேயே 10 அமைச்சர்கள், 10 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் அங்கே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்ட வாரியாக, இந்திய காவல் பணி அதிகாரிகள் மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் நியமிக்கப்பட்டார்கள். அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் வீரர்கள், படகுகள், உபகரணங்கள், 375 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்கள், 275 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையின் 10 குழுக்கள் களத்தில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கூடுதலாக, மீட்பு பணிகளை விரைவுபடுத்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற 230 பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். இதுமட்டுமின்றி, நமது இராணுவ வீரர்கள் 168 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முன்னெச்சரிக்கையாக, இதுவரை 12 ஆயிரத்து 653 பேர் மீட்கப்பட்டு, 141 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பெருமழையினையும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும், நானும், தலைமைச் செயலாளர் அவர்களும் பலமுறை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் அவ்வப்போது கண்காணித்து வருகிறோம்.
கடந்த 19-ஆம் தேதியன்று இரவு மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை புது தில்லியில் சந்தித்து, தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள இரண்டு பெரிய வெள்ள பாதிப்புகளுக்குத் தேவைப்படும் நிதியினை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிடக் கோரிக்கை மனுவை அளித்துள்ளேன். தென் மாவட்டத்துக்கு மட்டும் 2000 கோடி ரூபாயை முதல் கட்டமாக வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில், நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுடன் ‘வீடியோ கால்’மூலமாக முகாம்களில் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், வழங்கப்படும் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் குறித்தும் கேட்டறிந்தேன்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுடனும், இங்கிருந்து பணியாற்றி வரும் அதிகாரிகளுடனும் காணொலி வாயிலாக தகவல்களைக் கேட்டறிந்தேன்.
நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், மருத்துவ உதவிகளையும் குறைவின்றி செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.
சென்றடைய முடியாத நிலையில் இருக்கக்கூடிய கிராமங்களில் உள்ள மக்களின் நிலை மற்றும் அவர்களை மீட்கப்படக்கூடிய அந்த அவசர பணி குறித்தும், என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்து, அந்தப் பணிகளை விரைவுப்படுத்தவும் கேட்டுக் கொண்டேன்.
தண்ணீர் சூழ்ந்துள்ள கிராமங்களில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் கேட்டுக் கொண்டேன்.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கக்கோரி ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும், உணவுப் பொருட்களை விநியோகிக்கவும் விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்கள், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோரக் காவல் படையின் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பெருமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதால், அதிகபட்ச அளவில் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர்களும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் பெருமுயற்சியினாலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் சிறந்த பங்களிப்பினாலும், வருவாய்த் துறை மற்றும் அனைத்துத் துறைகளின் ஒருங்கிணைந்த களப்பணியினாலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், கால்நடை இழப்பைச் சந்தித்திருக்கக்கூடிய மக்களுக்கும் தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும்.
இந்த மழை, வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்; சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்; மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து, 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகச் சேதமுற்றிருப்பின், இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, 22 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்; மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாயிலிருந்து, 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்; 33,000 ரூபாயாக இருந்த எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணத்தை, 37,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்; 3,000 ரூபாயாக இருந்த வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணத்தை 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்; சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), 32,000 ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 15 ஆயிரம் ரூபாயாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ஒரு இலட்சம் ரூபாயாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
அதி கனமழையின் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர்களும், அதிகாரிகளும் இறுதிவரை இங்கேயே தங்கி மக்கள் காப்புப் பணிகளில் நிச்சயமாக ஈடுபட இருக்கிறார்கள் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி : ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு குறித்து ஆளுநர் தெரிவித்தது பற்றி...
முதலமைச்சர் அவர்களின் பதில் : ஆளுநர் வாரத்திற்கு ஒருமுறை டில்லிக்கு சென்று வருகிறார். அப்படி போகும்போது தயவுசெய்து டில்லியில் வாதாடி, போராடி தேவையான நிதியை வாங்கிக் கொடுத்தால் அவர்களுக்கு நாங்கள் நன்றி கடன்பட்டிருப்போம்.
கேள்வி : மத்திய அரசால் கொடுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை…. இதுவரை மத்திய அரசிடம் இருந்து நிதி உடனே கிடைக்கும். ஆனால் இந்த மழை வெள்ளத்திற்கு இதுவரையில் நிதி எதுவும் அறிவிக்கவில்லையே?
முதலமைச்சர் அவர்களின் பதில் : ஒரு நீண்ட விளக்கம் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் சொல்லிக்கொள்கிறேன். நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள். நான் எதிர்பார்த்திருந்த கேள்வி அது. ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பைப் பற்றி விளக்கம் சொல்கிறேன். இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் செலவுகளை சமாளிப்பதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாநில பேரிடர் நிவாரண நிதி (SDRF) என்ற நிதி உள்ளது. எந்தெந்த மாநிலத்திற்கு இந்த நிதி எவ்வளவு என்பதை ஐந்தாண்டு காலத்திற்கு ஒருமுறை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் நிதிக் குழு (Finance Commission) தீர்மானிக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டினுடைய SDRF-க்கு ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 1,200 கோடி ரூபாய் ஆகும். இதில் 75 விழுக்காட்டை, அதாவது 900 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தரவேண்டும். 25 விழுக்காட்டை, அதாவது 300 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு ஏற்றிடவேண்டும். ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைகளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்கப்படும். ஒரு இயற்கைப் பேரிடரின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும்போது இந்த SDRF நிதி போதவில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (NDRF) கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.
சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தையும், தற்போது தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ்வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-ல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்றுதான் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். இதைத்தான் நானும் மாண்புமிகு பிரதமர் அவர்களை நேரில் சந்தித்தபோதும் வலியுறுத்தி குறிப்பிட்டிருக்கிறேன். மனுவாகவும் கொடுத்திருக்கிறேன். ஆனால் இன்று வரை இந்த இரண்டு பேரிடர்களும் கடும் பேரிடர்களாக அறிவிக்கப்படவில்லை.
NDRF-இல் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது SDRF-க்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல.
சவாலான நிதிநிலைச் சூழல் இருக்கும் போதிலும், ஒன்றிய அரசு இந்தக் கூடுதல் நிதி தராத போதிலும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு நிதியைச் செலவிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். சென்னையில் நிவாரண உதவிக்கும் மீட்புப் பணிகளுக்கும் 1500 கோடி ரூபாய்க்குக் கூடுதலாக செலவிடப்பட்டுள்ளது. நான் இன்று இங்கு அறிவித்துள்ள நிவாரண உதவிகளுக்கும், பணிகளுக்கும் 500 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, சேதமடைந்துள்ள சாலைகள், பாலங்கள், குடிநீர்த் திட்டங்கள், மருத்துவமனைகள், பல்வேறு கட்டடங்கள் போன்றவற்றை சீரமைப்பதற்கும் பெரும் நிதி தேவைப்படும்.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் அதே நேரத்தில், இந்த வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை குறிப்பாக சாலைகள், மருத்துவமனைகள், பாலங்கள், மின்கட்டமைப்புகள் ஆகியவற்றை சீர்செய்யும் பணிக்காக தமிழ்நாடு அரசு உடனடி முன்பணமாக மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 250 கோடி ரூபாயை விடுவிக்க ஆணையிட்டுள்ளேன். அதோடு மேலும் தாமதமின்றி இந்த இரண்டு பேரிடர்களையும் கடும் பேரிடர்களாக அறிவித்து ஒன்றிய அரசு NDRF-இல் இருந்து கோரப்படுள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் சார்பிலும் தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: அணைகளிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடுப்பட்டுள்ளது குறித்து....
அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்: அணையின் இருப்பை பொறுத்தமட்டில் முதல் நாளிலிருந்து எவ்வளவு கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்பதை நாங்கள் அறிவித்துக் கொண்டிருந்தோம். 45,000 கனஅடி தண்ணீர் வருகிறபோது, இது 1 இலட்சத்தை தொடும் என்பதையும், வெள்ளப் பெருக்கு வருகிறது என்பதை நாங்கள் குறுஞ்செய்தி மூலமாக அனைவருக்கும் முன்னரே தெரிவித்திருக்கிறோம். அதற்குப்பிறகு இரவு கடுமையாக, தொடர்ச்சியாக மழை வருகிறபோது 1 இலட்சம் கனஅடி அளவிற்கு தண்ணீர் வருகிறது. நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்த காரணத்தினால்தான் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருக்கக்கூடியவர்களை நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு போயிருக்கிறோம். நீங்கள் குறிப்பிடுவதைப்போல, குற்றச்சாட்டு யார் வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் உண்மை நிலவரம் இதுதான்.
கேள்வி: வெள்ளப் பெருக்கு குறித்த தகவல் கொடுத்திருந்தால் வீட்டில் உள்ளவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்கிறார்களே…
அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் பதில்: நீங்கள் சொல்வதைப் போல, கரையோர மக்களுக்கு எந்தவிதமான அறிவிப்பு இல்லாமல் இருந்திருந்தால், 1,45,000 கன அடி தண்ணீர் வருகிறபோது, எவ்வளவு பெரிய உயிரிழப்பு வந்திருக்கவேண்டும். நீங்களே பாருங்கள். நாங்கள் முன்னரே அறிவித்த காரணத்தால் தான் பல பேர் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் அவர்களின் பதில் : 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரியை மனதில் வைத்து நீங்கள் பேசுகிறீர்கள். அதுவல்ல இது. முதலில் அதை தெரிந்துகொள்ளுங்கள்.
அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் பதில்: நேரடியாக செய்தியாளர்கள் சந்திப்பில், முதல் நாள் இரவு அத்தனை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கறோம். இவ்வளவு கனஅடி தண்ணீர் வரப்போகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வரவேண்டும் என்பதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும் கேட்டிருந்தோம். காவல்துறை, தீயணைப்புத்துறையினர் அங்கிருந்து பலபேரை வெளியேற்றிய காரணத்தினால்தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. அதையும் மீறி சிலர் அங்கே இருந்திருக்கிறார்கள். இருந்தவர்களையும் அடுத்த நாட்களிலிருந்து உங்களுக்கு தெரியும், படகுகளை பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்து, அவர்களை காப்பாற்றியிருக்கிறோம்.
கேள்வி : தாமிரபரணி ஆற்றின் கிளை நதிகளிலிருந்து நிறைய அணைகளை திமுக அரசு கட்டியிருக்கிறது. இப்போது ஆத்தூர் முக்காணி அருகில் ஒரு அணை கட்டுவதற்கு பொதுமக்கள் விரும்புகிறார்கள். திமுக அரசு அதை நிறைவேற்றுமா?
முதலமைச்சர் அவர்களின் பதில் : அதையெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். ஆய்வு செய்த பிறகு அதன்படி நடக்கும். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல எங்கெங்கு தேவைப்படுமோ அதற்குரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.
கேள்வி : நேரில் பிரதமரை சந்தித்தபோது, நிவாரண நிதி சம்பந்தமாக பிரதமர் ஏதும் பதில் கூறினாரா?
முதலமைச்சர் அவர்களின் பதில் : 20 நிமிடம் எங்களிடம் பேசினார். எல்லாவற்றையும் விவரமாக கேட்டறிந்தார். அனைத்தையும் விவரமாக சொல்லியிருக்கிறோம். பிரதமர் உடனே கவனிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
கேள்வி : எதிர்க் கட்சித் தலைவர் குற்றம் சாட்டியிருக்கிறார், தமிழக அரசு வெள்ளப் பாதிப்புகளை சரியாக கையாளவில்லை என்று சொல்லியிருக்கிறார். தங்கள் பதில்…
முதலமைச்சர் அவர்களின் பதில் : யார்? தூத்துக்குடி மக்களைச் சுடச் சொல்லிவிட்டு - டிவியைப் பார்த்து தான் தெரிஞ்சுக்கிட்டேன்னு சொன்னாரே அவரா?