மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து அவதிப்பட்டார்கள்.
இதையடுத்து புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் நியாயவிலைக் கடைகளில் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரூ.6000 நிவாரண நிதி வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்கள் முழுமையாகவும் திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களிலும் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமையாகவும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களில் நிவாரண நிதி கிடைக்கும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மிக்ஜாம் புயல் மழை வெள்ளத்தால் பாதித்த ஒன்றிய, மாநில மற்றும் பொதுத்துறை அலுவலர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படும்.இவர்கள் தங்களது பாதிப்பு விவரங்களை வங்கிக் கணக்கு விவரத்துடன் நியாவிலைக் கடைகளில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இரண்டு நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் இழந்த குடும்பங்களுக்குச் சம்பந்தப்பட்ட நியாயவிலைக்கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் காவல்துறையுடன் இணைந்து தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.