நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் 2001ம் ஆண்டு இதேநாளில் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த 9 பாதுகாப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளன்று உயிரிழந்த வீரர்களுக்கு எம்.பிக்கள் மரியாதை செலுத்துகின்றனர். அந்த வகையில் இன்று வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி எம்.பிக்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வந்தது.
அப்போது மக்களைவையில் எம்.பிக்கள் அனைவரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து பெண் உட்பட 2 மர்ம நபர்கள் அரங்கிற்குள் குதித்தனர். அதோடு அவர்கள் 2 பேரும் வண்ணம் வரும் பொருளையும் எடுத்து வந்தனர். மேலும் 'சர்வாதிகாரம் ஒழிக' என்ற கோஷங்களை எழுப்பினர்.
இதனை கண்டு பதறிய சக எம்.பி.-க்கள் அலறியடித்து போகவே, அதில் சிலர் அவர்களை பிடித்தனர். அவர்கள் பிடிக்க முயற்சி செய்யும்போது அந்த நபர்கள், மேஜை மீது குதித்து குதித்து ஓடிக்கொண்டிருந்தனர். தொடர்ந்து தீவிர முயற்சிகளுக்கு பிறகு அந்த நபர்களை பிடித்து சக எம்.பி-க்கள் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நமது ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் நாடாளுமன்றத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகுவலைதள பதிவில், "முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு, நமது ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் நாடாளுமன்றத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் பாதுகாப்பு குறைபாடுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என தெரிவித்துள்ளார்.