தமிழ்நாடு

“தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்ப்பு” - முதலமைச்சர்!

தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இத்தகைய பெருமழையிலும், உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்ப்பு” - முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் கடந்த 3-ம் தேதி இரவிலிருந்து 5ம் தேதி வரை அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்தனர்.

கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை தற்போது இயல்பு நிலைக்குத் மெல்ல மெல்ல திரும்புகிறது. மேலும் தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களைச் சரிசெய்திட இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்கிடக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். மேலும் சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட ஒன்றிய அரசின் குழுவினை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறும் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செயலாளர் கமல் கிஷோர் உள்ளிட்டோர் சென்னைக்கு வருகை தந்தனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

“தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்ப்பு” - முதலமைச்சர்!

மேலும் மழை வெள்ளச் சேதங்கள் குறித்தும், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜ்நாத் சிங், ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வங்கக் கடலில் உருவாகிய புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதோடு பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி, அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைத்திடவும், நிவாரண முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், மின்சார வசதி உட்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதி செய்திடவும், மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மின்சார வாரியத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படுவதை உறுதி செய்திடவும், பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்கவும், மாவட்ட நிருவாகம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டது.

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 109.41 செ.மீட்டர் பெய்து, மிகப் பெரிய சேதம் ஏற்பட்டது குறித்தும், குறிப்பாக வரலாறு காணாத வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் 32 செ.மீ., சென்னை - பெருங்குடியில் 29 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

“தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்ப்பு” - முதலமைச்சர்!

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பேசியதாவது, "சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புகளை ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் இன்று ஆய்வு செய்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சென்னையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெய்த பெருமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு, சென்னை நகரமும், மக்களும் இயல்பு நிலைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்த பெரும் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்த பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து களப்பணி ஆற்றி வருகின்றோம்.

“தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் பெருமளவில் தவிர்ப்பு” - முதலமைச்சர்!

தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இத்தகைய பெருமழையிலும், உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் போன்ற பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 5 ஆயிரத்து 60 கோடி ரூபாயினை வழங்கிடுமாறு இந்தியப் பிரதமருக்கு ஏற்கனவே நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.

நமது கோரிக்கைகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றினையும் ஒன்றிய அமைச்சரிடம் அளித்துள்ளேன். இழப்பீடுகளை மதிப்பீடு செய்திட ஒன்றிய அரசின் குழு ஒன்றும் விரைவில் தமிழ்நாடு வர உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து, உரிய நிதி உதவியை ஒன்றிய அரசு விரைவில் வழங்கிடும் என ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.

நிவாரணப் பணிகளை முழுவீச்சில் தொடர்ந்து மேற்கொண்டு, அனைத்துப் பகுதிகளையும் இயல்பு நிலைக்கு விரைவில் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.

banner

Related Stories

Related Stories