மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவிலிருந்து அதி கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து உடனே அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறனர்.
மேலும் வெள்ளம் அதிகமாகத் தேங்கியுள்ள இடங்களில் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மக்களைப் பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகர் விஷால் தனது சமூகவலைதள பதிவில் மாநகராட்சியை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார். மேயர் பிரியா வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், "2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
செம்பரம்பாக்கம் ஏரியைகூட முன்னறிவிப்பு இன்றி திறந்துவிட்டார்கள். இன்று முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது. பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 6 லட்சம் உணவு பொட்டலங்களை இதுவரை வழங்கியிருக்கிறோம். வெள்ளம் உங்கள் வீட்டிற்கு மட்டும் வரவில்லை. ஒட்டுமொத்த சென்னை மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
திமுக பொறுப்புக்கு வந்த 2021 மே மாதத்தில் இருந்து மழைநீர் வடிகால் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வந்தது. அப்படியான பணிகளால்தான் சென்னை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த மழைநீர் கால்வாய்கள் மூலம்தான் கடந்த வாரம் முன்பு வரை பெய்த மழைநீர் எல்லாம் வெளியேறியது. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும் என தெரிவித்துள்ளார்.
மேலும், "2015 அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை விட மோசமான நிலை இப்போது ஏற்பட்டிருப்பது போல நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். திரைப்பட வசனம் போல பேசிவிட்டு கைத்தட்டல் வாங்க முயற்சிக்கும் விஷயம் இல்லை இந்த பேரிடர்" என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.