சென்னை வானகரம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் பணியாற்றி வரும் தனியார் நிறுவனம், தொழிற்சாலைகளில் இருந்து இரும்பு கழிவு பொருட்களை மொத்தமாக எடுத்து விற்பனை செய்யும் தொழில் நடந்து வருகிறது.
இந்நிலையில் மறைமலைநகரைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் வினோத்துக்கு அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர், தனது நண்பர் ஜானகிராமன் என்பவர் காட்ரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் திருப்பெரும்புதூரில் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து இரும்பு கழிவுகளை எடுக்க பலருக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்துள்ளார். இவரால் பலர் பயனடைந்துள்ளனர்.
இவருடன் கைகோர்த்து கொண்டால் நீங்களும் நல்ல வாழ்க்கையை வாழமுடியும் போன்ற ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார். பின்னர் ஜானகிராமனுடனும் வினோத் பேசியுள்ளார். இதையடுத்து ஜானகிராமன் சொன்ன வங்கி கணக்கிற்கு ரூ.25 லட்சம் பணத்தை வினோத் செலுத்தியுள்ளார்.
ஆனால் இவர்கள் சொன்னபடி எந்த ஒரு தொழிற்சாலையில் இருந்தும் ஒப்பந்தம் வாங்கி கொடுக்கவில்லை. ஒன்று இரண்டு நாட்கள் அல்ல இரண்டு மாதங்களுக்கு மேல் ஏமாற்றி வந்துள்ளனர். பின்னர்தான் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வினோத் இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலிஸார் ஜானகிராமன், சுகுமாரன் ஆகிய இருவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட சுகுமார் பிரபல ரவுடி. காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ.க நிர்வாகியான படப்பை குணாவின் கூட்டாளி எனவும் கூறப்படுகின்றது.
அதேபோல் ஜானகிராமன் காஞ்சிபுரம் மாவட்ட ஒ.பி.சி அணி பொதுச் செயலாளராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர் காட்டரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் என்று பொய் சொல்லி பலரை ஏமாற்றி பல கோடி வருவாய் ஈட்டியதுதம் விசாரணையில் தெரியவந்துள்ளது.