புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, 2023-ன் மாநில அளவிலான தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்த விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரிய கருப்பன் கூறுகையில், "கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவது மட்டுமல்ல, ஜனநாயகத்தை காப்பதிலும், அதை தேர்தல் ரீதியாக சந்திப்பதிலும் திமுக என்றைக்கும் தயங்கியது இல்லை. நமது முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூட அன்றைய ஆளுங்கட்சி முதலமைச்சரை பார்த்து, உள்ளாட்சி தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வலியுறுத்தினார். அதுமட்டுமல்லாமல் நீதிமன்றம் சென்று அந்தத் தேர்தலை நடத்த வழிவகை செய்தார்.
அதிமுக ஆட்சி காலத்தில் நகர்ப்புறமாக இருந்தாலும் சரி, கிராமப்புறமாக இருந்தாலும் சரி, ஒரே கட்டத்தில் நடத்தக்கூடிய தேர்தல் வழக்கத்தை மாற்றி பொருட்களை வாங்கி எப்படி தவணை செலுத்துவோமோ, அதேபோல் தவணை முறையில் தேர்தலை நடத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி காட்டுவோம் என்று கூறி வாக்குறுதி கொடுத்து, ஆட்சிக்கு வந்வுடன் உள்ளாட்சித் தேர்தலை நடத்திக் காட்டியவர் தான் முதலமைச்சர்.
அதேபோல் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்துவதில் எந்தவித தயக்கமும் இல்லை. ஆனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக நடத்திய இரண்டு தேர்தல்களிலும் முறையான அங்கத்தினர்கள் இல்லை. அதில் நிறைய குளறுபடிகள் உள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன நபர்கள் கூட வாக்காளர் பட்டியிலில் நீக்கப்படாமல் அதில் இடம்பெற்றிருந்தனர். அதனை சீர் செய்ய வேண்டும் என்றுதான் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இவற்றையெல்லாம் முறைப்படுத்த வேண்டும் அதேபோல் அவர்களே அட்டவணையை தயார் செய்து கொடுத்துள்ளனர். தேர்தல் நடத்துவது முக்கியம்தான்; ஆனால் அதில் உள்ள வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தி விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜனநாயக தேர்தல் மூலமாகதான் நிலை நிறுத்த முடியும். அதை செய்ய திமுக என்றைக்கும் தயங்கியது கிடையாது. கூட்டுறவு தேர்தலை நடத்த வேண்டும் என்றால் முதலில் அதற்கான அடிப்படை என்னவென்றால் வாக்காளர் பட்டியலை சரிபடுத்த வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆனாலும் கூட்டுறவு சங்கங்களுக்கான சில பதவிகள் ஒரு மாதத்திற்கு முன்பு தான் முடிவடைந்துள்ளது. மேலும் ஜனவரி மாதம் வரை 170 சங்கங்களுக்கான பதவிக்காலம் உள்ளது. அனைவரது விருப்பமும் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் அதில் உள்ள குளறுபடிகளையும் வாக்காளர் பட்டியலை சரிப்படுத்திய பிறகு தேர்தல் நடத்தப்படும்.
கூட்டுறவுத் துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்தியாவிலேயே தமிழகம் தான் தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று பலரும் விரும்புகின்றனர் வரக்கூடிய ஜனவரி மாதம் கூட முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் புதிய முதலீட்டாளர்கள் தொடங்கக்கூடிய தொழில்களில் உள்ள வேலை வாய்ப்புகள் அதே போல் அரசில் உள்ள காலி பணியிடங்களை படித்த இளைஞர்களுக்கு ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூட்டுறவுத் துறையை பொறுத்தவரை அவ்வப்போது ஏற்படுகின்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு செய்து வருகிறோம். விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் நகர்ப்புற வங்கிகளில் உள்ள காலி பணியிடங்கள் உள்ளிட்டவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு வங்கிகள் ஏற்கனவே ஆர்பிஐ கட்டுப்பாட்டில் மேற்பார்வையில் தான் உள்ளது. அது நல்ல ஒரு பாதுகாப்பு. பொதுமக்கள் ஏமாந்து விடாமல் இருப்பதற்கான வழியாக இருக்கும். அதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் முறையாக பயன்படுத்தப்படும்.
புதுக்கோட்டை நகர கூட்டுறவு வங்கிக்கு ஆர்பிஐ 25000 ரூபாய் அபராதம் விதித்துள்ள கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் பெரியகருப்பன் 6000 7000 வங்கிகள் உள்ள நிலையில் அதில் ஒன்றில் தவறு நடந்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அது சரி செய்யப்படும்.
பல கூட்டுறவு சங்கங்கள் கடந்த அதிமுகவின் 10 ஆண்டுகள் ஆட்சியில் தொய்வு நிலை சந்தித்த நிலையில் தற்போது அவற்றையெல்லாம் மீண்டும் புத்துயிர் ஊட்டுகின்ற பணியை தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. அதில் சில வங்கிகளுக்கு ஆர்பிஐ உதவியுடன் நிதி உதவி செய்து சங்கங்கள் எல்லாம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரத்தட்டுப்பாடு எந்த இடத்திலும் இல்லை தேவையான அளவு உரங்கள் அனைத்து மாவட்டத்திலும் கையிருப்பு உள்ளது. அதனை அத்துறை பதிவாளர் கண்காணித்து வருகிறார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் என்பது மாநில அரசு கொடுப்பதல்ல ஒன்றிய அரசு வழங்குவது. காங்கிரஸ் அரசில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான மண்ணெண்ணெய் வழங்கினார்கள் தற்பொழுது மண்ணெண்ணெய் கிடைக்கவில்லை என்றால் அதற்கு ஒன்றிய அரசு தான் காரணம். விவசாயிகள் கடன் வழங்கி உள்ள நிலையில் விவசாயிகள் கடன்களை திருப்பிக் கொடுத்து புதுப்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்றார்.