தமிழ்நாட்டில்கூட ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். குறிப்பாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், வேண்டுமென்றே இழுத்தடித்து வருகிறார்.
இதனால் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், அரசு நடவடிக்கைகளுக்கும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக குற்றம் சாட்டி தமிழ்நாடு அரசு, கடந்த 31-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக 198 பக்க மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு கடந்த நவம்பர் 10-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும், கால தாமதம் குறித்தும் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆளுநரின் செயலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது வழக்கை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து பயந்த ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சென்னை பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதா, தமிழ் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா உள்ளிட்ட10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றுவதற்காகச் சிறப்புச் சட்டமன்ற கூட்டம் கடந்த நவ.18ம் தேதி நடைபெற்று, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அ.தி.மு.க வை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி ரமணா ஆகியோர் ஊழல் வழக்கு தொடர்பாக அடுத்த கட்ட விசாரணைக்கு நவம்பவர் 13ம் தேதி தமிழ்நாடு அரசின் கடிதத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி விட்டதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி ஆளுனருக்கு அனுப்பப்பட்ட கடிதம் பரிசீலணையில் உள்ளதாகவும் ஆளுநர் தரப்பில் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.முக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க ஒப்புதல் வழங்க கோரி கடந்த ஆண்டு ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு ஒப்புதல் கோரியது. இதுநாள்வரை ஒப்புதல் வழங்காத இருந்த ஆளுநர் தற்போது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கிற்கு பணிந்து ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.