அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. கல்லூரிகளில் கூடுதல் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்குக் கட்டணம் திரும்பி வழங்கப்படும் என துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த துணைவேந்தர் வேல்ராஜ், "அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டது. விடைத்தாள் திருத்தக் கட்டணம் போன்ற இதர செலவுகள் அதிகரித்துள்ளதால் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது. 100% உயர்த்த வேண்டும். ஆனால் 50% மட்டுமே உயர்த்தப்பட்டது.
இந்த தேர்வு கட்டணம் உயர்வு ஜனவரி மாதம் முடிவெடுக்கப்பட்டு மே மாதம் கல்லூரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி பல கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. சில கல்லூரிகளும் மற்றும் மாணவர்களும் தேர்வு கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும் உயர் கல்வித்துறை அமைச்சர் இந்த ஆண்டு பழைய கட்டணமே தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பழைய கட்டணமே இந்த தொண்டு மாணவர்கள் செலுத்தலாம். கூடுதலாகக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்குக் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும்.
மேலும் உயர் கல்வித்துறை அமைச்சர் எல்லா பல்கலைக்கழக துணைவேந்தர்களையும் அழைத்து ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்கக் கூறியுள்ளார்கள், இது தொடர்பான கூட்டம் விரைவில் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளார்.