புதுக்கோட்டையில் ரூ.67.83 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது அரசு பல் மருத்துவக் கல்லூரியைத் தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ரூ. 8.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொதுச் சுகாதாரத் துறை கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
புதுக்கோட்டையில் இந்நிகழ்வில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன், திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம். எம் அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்" அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 120 மருத்துவமனைகள் HR என்ற மருந்துவ பணிகள் உருவாக்காமல் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அப்படித் தரம் உயர்த்தினால் மருத்துவமனையின் தரம் உயர்த்தியதாக அர்த்தம் அல்ல.
தற்போது விஜயபாஸ்கர், அ.தி.மு.க ஆட்சியில் தரம் உயர்த்திய மருத்துவமனைக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் இரண்டரை ஆண்டு காலமாக மருத்துவர்களை நியமிக்கவில்லை என தேவையில்லாமல் குற்றம்சாட்டுகிறார். தற்போது மருத்துவர்கள் மருத்துவர்கள் நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவத் துறையில் காலியாக இருந்த 986 பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவத்துறையில் தொடர்ந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி ஆணையரின் உதவியாளர் காயமடைந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளாமல் அறிக்கை விடுவது வருத்தத்துக்குரியது. எதிர்க்கட்சி தலைவர் என்பது பொறுப்பை உணராமல் அறிக்கை விடுவது அவரது அறியாமையைக் காட்டுகிறது.
சென்னைக்கும் சேலத்திற்கும் அடிக்கடி காரில் செல்லும் எடப்பாடி பழனிச்சாமி, வழியில் உள்ள ஏதாவது ஒரு சுகாதார நிலையங்களுக்குச் சென்று பாம்பு, நாய்க்கடிக்கு மருந்துகள் இருக்கிறதா? மருந்துகள் எத்தனை நாட்கள் இருக்கிறது? என்று கேட்டு தெரிந்து கொண்டு பேசவேண்டும். போலி மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட மூன்று போலி மருத்துவமனைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.