முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் என கூறி ரூ.5 கோடி வரை நில மோசடி செய்யப்பட்டுள்ளதாக திருச்செங்கோடு ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் கோவை ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில், 2012 ஆம் ஆண்டு குப்பிச்சிபாளையம் மரப்பரை கிராமத்தில் மோகனசுந்தரம் மற்றும் மணி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனர்கள் சபாநாயகம், சந்திரகாந்த மணிக்கவுண்டர் ஆகியோர் தில்லை நகர் என்ற பெயரில் வீட்டு மனை விற்பதாக விளம்பரம் செய்தனர்.
இதனை நம்பி சேலம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 86க்கும் மேற்பட்டோர் பணம் முதலீடு செய்தார்கள். பிறகு நிலம் வாங்கியவர்களில் சிலர் வீடு கட்ட முயன்றனர். அப்போதுதான் வாங்கிய நிலங்கள் அனைத்தும், வீடு கட்டுவதற்கு அனுமதி பெறாத மனை பிரிவு என்பது தெரியவந்துள்ளது.
பின்னர் இது குறித்து விசாரித்தபோதுதான் மணி கவுண்டர் மருமகன் சந்திரகாந்த, சபாநாயகம், சங்கர், பத்மபிரியா, சிவா ஆகியோர் கூட்டுச் சேர்ந்து சுமார் ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தைப் போலியான வரைபடம் தயாரித்து நிலம் வாங்கி எங்களை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து எங்களது பணத்தைத் திருப்பி கொடுக்கும்படி கேட்டபோது, மணி கவுண்டர் முன்னால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர். உங்களால் எங்களை எதுவும் செய்ய முடியாது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் போய் சொல்லுங்கள் என மிரட்டியதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்துதான் பாதிக்கப்பட்டவர்கள் கோவை ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.