சென்னை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் சனாதன ஒழிப்பில் ஒத்த கருத்துகளையுடைய அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னணி எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்
அப்போது இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் குறித்தும், அது மக்களை எவ்வளவு அடிமையாக்குகிறது என்பது குறித்து பேசினார். மேலும் 'சனாதனம் என்பது டெங்கு, மலேரியா, கொரோனா போன்றது. எனவே அதனை எதிர்க்க கூடாது; ஒழிக்கணும்' என்றும் பேசினார். அதுமட்டுமின்றி சனாதனம் என்ற பெயரில் இன்னமும் மக்களை அடிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இவரது பேச்சு பாஜக, ஆர்.எஸ்.எஸ். இந்துத்வ கும்பலுக்கு பெரும் கடுப்பை கிளப்பவே, உதயநிதி பேசியதை திரித்து அவர் இனப்படுகொலை பற்றி பேசியதாக போய் பிரச்சாரத்தை மேற்கொண்டது. பாஜகவின் உண்மை முகத்தை தோலுரிக்கும் விதமாக பாஜக கும்பலுக்கு இந்திய அளவில் இருந்து பாஜகவுக்கு எதிர்ப்பும், உதயநிதிக்கு ஆதரவும் குவிந்தது.
மேலும் இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, ஆ.ராசா உள்ளிட்டோர் மேஈது இந்து முன்னணி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நீதிபதி நீதிபதி அனிதா சுமந்த் வந்தது.
அப்போது அமைச்சர் சேகர்பாபு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் N.ஜோதி வாதிட்டார். அந்த வாதம் பின்வருமாறு :
"இந்து மதத்தை சேர்ந்தவர்கள் என கூறி கொண்டு, கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், உள்நோக்கத்துடன் சேகர்பாபுவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதாக குற்றம் சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சனாதனம் என்பதும், இந்து மதம் என்பதும் எனக் கூறுவதை முற்றிலும் மறுக்கிறேன்.
அன்பு காட்டுவது, சகோதரத்துவம், பசித்தவருக்கு உணவளிப்பதே சனாதன தர்மம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து மதம் பழமையான மதம் தான். ஆனால் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன், சனாதனத்தை ஏற்கவில்லை. இந்து மதம் தோன்றிய பிறகே, சனாதன தர்மம் உருவாக்கப்பட்டது. பரந்து விரிந்த இந்து மதத்தை, சனாதனம் என்ற சிறிய வட்டத்துக்குள் சுருக்க முடியாது.
நான் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஆனால் ஒரு போதும் மனிதனால் உருவாக்கப்பட்ட சனாதனத்தை ஏற்க முடியாது. சனாதனத்தை விலக்கினால் மட்டுமே இந்து மதத்தை மக்கள் ஏற்பர்" என்றார்.
இதைத்தொடர்ந்து வழக்கறிஞர் ஜோதி வாதிட்டதாவது, "மனு ஸ்மிருதியை அடிப்படையாக கொண்டுள்ள சனாதன தர்மத்துக்கு எதிராக சேகர்பாபு பேசியதில் எந்த தவறும் இல்லை. ஆரியர்களின் சட்டம், ஆரியர்களுக்கு தான்; தமிழர்களுக்கு அல்ல. சாதிய நடைமுறைகள் இந்த மாநிலத்தை சீரழித்திருக்கிறது. இந்து ஒருவர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவதற்கு கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறைகள் இன்னும் உள்ளது. இதை ஒழிக்கவே விரும்புகிறோம்.
மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், திமுக மாவட்ட செயலாளர் என்ற முறையில் சேகர்பாபு பங்கேற்றார். பைபிள், குரான் போல மனு ஸ்மிருதி புனித நூல் அல்ல. எனவே அரசியல்சாசனத்துக்கு விரோதமான இந்த வழக்கை தாக்கல் செய்தவருக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும்.
சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் ஊக்குவிக்கும் சனாதன தர்மத்தை ஏற்கச் செய்யும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சனாதன தர்மத்தை ஏற்றுக் கொள்வது, அரசியல் சாசனத்தை மதிக்காமல் இருக்கச் செய்வதைப் போன்றது. மனு ஸ்மிருதிக்கு எதிராக பேசுவது எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக அமையும்? சதுர்மறை ஆகம சாத்திரமெல்லாம் சந்தைப் படிப்பு, நம் சொந்த படிப்போ என கேள்வி எழுப்பிய வள்ளலாரும் ஒரு இந்து தான். நிர்வாகம் என்பது மதச்சார்பற்றது; நிர்வாகமும், மதமும் வெவ்வேறானவை." என்றார்.