சென்னை ராஜ்பவனில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு கடந்த 25-ம் தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. இந்த விவகாரத்தில் அங்கு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்ற கருக்கா வினோத்தை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் குற்றவாளி தப்பியோடிவிட்டதாகவும், தமிழ்நாடு காவல்துறை இதுகுறித்து எந்த ஒரு வழக்கும் பதியவில்லை என்றும் போலியான குற்றச்சாட்டை மாறி மாறி ஆளுநர் மாளிகை முன்வைத்து வருகிறது. மேலும் குற்றவாளி மீது காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் போலியான குற்றசாட்டை முன்வைத்துள்ளது ஆளுநர் மாளிகை.
இதனை முறியடிக்கும் விதமாக நேற்று தமிழ்நாடு காவல்துறை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் ஆளுநர் மாளிகை மாறி மாறி கூறிய அப்பட்டமான பொய் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் நடைபெற்ற 9 குண்டு வீச்சு சம்பவங்களிலும் பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லையில் பள்ளி கல்வித்துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் தலைவர் அப்பாவு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் மாளிகை குண்டு வீசிய சம்பவத்தில் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் 9 பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.ஒன்பது சம்பவங்களையும் நிகழ்த்தியது பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியை சார்ந்தவர்கள். கட்சியில் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு குண்டு வீச்சு சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். இது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆளுநர் மாளிகை அருகே 10 ஆவதாக சம்பவம் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிகளும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது கிடையாது. ஆளுநர் மாளிகை குண்டு வீசிய சம்பவத்தில் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என நினைத்தால் அது நடக்காது.
ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு கண்டனத்தை பதிவு செய்கிறேன். கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத் விவகாரத்தில் பாஜகவினர் இரு பிரிவுகளாக செயல்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டில் வன்முறை சம்பவங்களை தூண்டுவதற்கு துடித்துக் கொண்டிருப்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.
ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் புட்டப் கேஸ், செட்டப் கேஸ் அதெல்லாம் போட வேண்டும் என தீவிரமாக இருக்கிறார்கள். அது தமிழகத்தில் நடக்காது. ஆளுநர் மாளிகை அருகே வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தமிழக போலீசார் முறையாக விசாரித்தால் உண்மையை சொல்லி விடுவார்களோ என்ற அச்சத்தில் சிபிஐ விசாரணை கேட்கிறார்கள் என தோன்றுகிறது." என்றார்.