சென்னை ராஜ்பவனில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு கடந்த 25-ம் தேதி (நேற்று) பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. நேற்று பகல் சுமார் 2.40 மணியளவில் ஆளுநர் மாளிகையில் உள்ள நுழைவு வாயில் எண்.1-க்கு நேர் எதிர்புறம் உள்ள நடைபாதையில் இருந்து, ஆளுநர் மாளிகையின் பிரதான நுழைவு வாயிலை நோக்கி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது.
இந்த விவகாரத்தில் அங்கு பணியில் இருந்த காவலர்கள் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசிய நபர் வினோத் என்ற கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குற்றவாளி தப்பியோடிவிட்டதாகவும், தமிழ்நாடு காவல்துறை இதுகுறித்து எந்த ஒரு வழக்கும் பதியவில்லை என்றும் போலியான குற்றச்சாட்டை முன்வைத்தது.
ஆனால் குற்றவாளியை காவல்துறை உடனே மடக்கி பிடித்து கைது செய்தது. அதுமட்டுமின்றி காவல்துறை இது தொடர்பாக FIR பதிவு செய்து கருக்கா வினோத் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலும் அடைத்தது. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே பல குற்றங்கள் புரிந்து சிறையில் இருந்த கருக்கா வினோத்தை பாஜக பிரமுகர் ஒருவர் ஜாமீனில் வெளியே எடுத்துள்ளது தெரியவந்தது. அதோடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் பாஜக மீது சந்தேகம் இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி தற்போது குற்றவாளி கருக்கா வினோத்தை ஏற்கனவே ஜாமீனில் எடுத்தது திருவாரூர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வகுமார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளது.