சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மேச்சேரி அருகே கோல்காரனூர் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவர் சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் OBC அணியின் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
இவரிடம் மேச்சேரி அருகே உள்ள சாம்ராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு வேலை வேண்டி தொடர்பு கொண்டார். அப்போது கமலக்கண்ணனும், வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி தவணை முறையில் ரூ.35 லட்சம் பணம் பெற்றுள்ளார். மேலும் சந்திரமோகனிடம் அண்மையில், வருமான வரித்துறையில் பணியில் சேர்வதற்கான பணி ஆணையையும் வழங்கி உள்ளார்.
இந்த பணி ஆணையை எடுத்துக் கொண்டு வருமான வரித்துறைக்குச் சென்ற சந்திரமோகன், அந்த பணி ஆணை போலி என்பதனை உணர்ந்தார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சந்திரமோகன், இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மையை அறிந்து, சேலம் பாஜக மேற்கு மாவட்ட OBC அணி செயலாளர் கமலக்கண்ணனை கைது செய்து, அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். பட்டதாரி வாலிபரிடம் வருமான வரித்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் மோசடியில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.