தமிழ்நாடு

“ஆன்மீக புரட்சி செய்த பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“ஆன்மீக புரட்சி செய்த பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலின் குருவாக செயல்பட்டு வந்தவர் பங்காரு அடிகளார் (82). இங்கு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய இவர், அதன் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் தொடங்க காரணமாக இருந்தவர் ஆவார்.

அந்த கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் செயல்பட்ட இவர், கல்வி சேவை, ஆன்மீக சேவை என்று அனைத்திலும் புதுமையாக திகழ்ந்தார். இவரது ஆன்மீக சேவையை பாராட்டி, 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் கருவறையில் பெண்கள் வழிபாடு செய்யும் முறையை மட்டுமின்றி, மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்ற முறையையும் கொண்டு வந்து, ஆன்மீகத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்து காட்டினார். இதனாலே இந்த கோயிலுக்கு நாள்தோறும் பெண் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

“ஆன்மீக புரட்சி செய்த பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இந்த சூழலில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த இவர், இன்று தனது 82-வது வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்களும் அஞ்சலியும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆன்மிகத்தில் புரட்சி செய்த பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுட்ன் இறுதி நிகழ்வு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:

“மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் அவர்கள் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார்.

‘அம்மா’ என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் அவர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான நடைமுறைகளை வழக்கப்படுத்தினார்.

கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளார் அவர்களின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத் தக்கது.

“ஆன்மீக புரட்சி செய்த பங்காரு அடிகளாருக்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

அவரது ஆன்மீக மற்றும் சமூக சேவைகளைப் பாராட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிப் பெருமைப் படுத்தியது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த திரு. பங்காரு அடிகளார் அவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன்.

உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் அவர்கள் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்காரு அடிகளார் அவர்களின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்.”

banner

Related Stories

Related Stories