“வள்ளலார்-200" ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டார். "வள்ளலாரின் இறைய அனுபவங்கள்" என்ற நூலினை வெளியிட்டு, வடலூரில் 100 கோடி ரூபாயில் வள்ளலார் பெயரில் அமையவிருக்கும் வள்ளலார் சர்வதேச மையத்திற்கான ஆணையினை வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழு தலைவர் முனைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயரிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மேலும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய பேருரை பின்வருமாறு : - “ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும், எவரும் ஒருமையுள் அடங்கி உலகியல் நடத்த வேண்டும் - என்பதை அறநெறியாகக் கொண்டு வாழ்ந்து காட்டிய அருட்திரு வள்ளலார் அவர்களின் 200 ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இனிய விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறேன்.
பொதுவாக நூற்றாண்டு விழா என்றாலோ - பிறந்தநாள் விழாக்கள் என்றாலோ - அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் கொண்டாடுவார்கள். ஆனால் செயல்பாபு என்று என்னால் அழைக்கப்படுகிற சேகர் பாபு மாதம் முழுவதும் - ஆண்டு முழுவதும் நடத்துவார்.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது நூற்றாண்டு விழாவை தினந்தோறும் நடத்திக் கொண்டு இருக்கிறார்.
மூன்று மாதம் - ஆறு மாதம் நடத்தினால் தான் அவருக்கும் திருப்தி ஆகும். இது ஏதோ - கணக்குக்காக - கடமைக்காக நடத்துவது இல்லை. உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் நடத்துவார். அவரிடம் எந்தப் பணியை ஒப்படைத்தாலும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் - மற்றவர்களை விட வித்தியாசம் தெரிவது போல நடத்திக் காட்டுவார் என்பதற்கு உதாரணம் தான் வள்ளலார் - 200 என்ற இந்த விழா ஆகும்.
“தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதிநாளாகவும், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும், அறிவித்த திராவிட மாடல் அரசானது அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் பிறந்தநாளை தனிப்பெரும் கருணைநாளாக அறிவித்தது. ”
* வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள்
* அவர் தொடங்கிய தரும சாலைக்கு 156 ஆண்டுகள்
* அவர் ஏற்றிய தீபத்துக்கு 152 ஆண்டுகள் - ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கடந்த ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் கொண்டாடினோம். அதில் நான் கலந்து கொண்டேன். அந்த விழாவில் வள்ளலார் - 200 விழாவுக்கான இலச்சினையை வெளியிட்டேன்.
தபால் உரை மற்றும் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்குவதற்கான நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தேன்.அதற்காக 3.25 கோடி காசோலை வழங்கப்பட்டது. அது ஒரு நாள் விழாவாக மட்டும் நடத்தி முடித்துவிடவில்லை.ஆண்டு முழுவதும் நடைபெறும் என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்தார்.ஆண்டு முழுவதும் என்னவாக நடத்துவார்கள் என்பதை அறிய நானும் ஆர்வமாக இருந்தேன்.
அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்த பிறகு தான் எனக்கே மலைப்பாக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் - இந்த ஆண்டு அக்டோபர் வரையிலான 52 வாரங்களும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் முப்பெரும் விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக முனைவர் பி.கே.கிருட்டிணராஜ் வானவராயர் தலைமையில் 14 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்களது ஆலோசனைப்படி 52 வாரங்களும் நிகழ்ச்சிகள் நடந்து முடிந்துள்ளது. சென்னையில் நான் கலந்து கொண்டது முதல் நிகழ்ச்சி.இதன் தொடர்ச்சியாக 50 வாரங்களாக 50 நகரங்களில் வள்ளலார் - முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது.இப்போது இங்கு நான் கலந்து கொள்வது 52 ஆவது நிகழ்ச்சியாகும்.
இது நிறைவு விழாவாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இது நிறைவு விழா மட்டுமல்ல - நிறைவான விழாவாக நடைபெற்றுள்ளது.வள்ளல்பெருமானாருக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையை - மரியாதையை நிறைவாக ஆற்றி இருக்கிறோம். தொடர் அன்னதானங்கள் 21 மண்டலங்களில் நடைபெற்றுள்ளன. பசிப்பிணி போக்க அணையா அடுப்பை உருவாக்கிய அண்ணல் பெயரால் அரசின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்குவள்ளலார் வாழ்க்கை தொடர்பாக கட்டுரை, பேச்சுமற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. அறிவுப்பசியையும் - வயிற்றுப் பசியையும் போக்கும் விழாக்களாக இவை அமைந்துள்ளன. இதனை ஆர்வத்துடன் செய்து காட்டியுள்ள அமைச்சர் சேகர் பாபு - இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் -சிறப்புப் பணி அலுவலர் குமரகுருபரன் - ஆணையர் முரளீதரன் - கூடுதல் ஆணையர் சங்கர் - உள்ளிட்ட அனைத்து அலுவலர்களையும் நான் பாராட்டுகிறேன்.
நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று - இந்தக் காலக்கட்டத்துக்குத் தேவையான மிகமுக்கியமான வழிகாட்டி தான் அருட்திரு வள்ளலார் பெருமான் அவர்கள். இறையியல் என்பது அவரவர் விருப்பம் ஆகும். அவரவர் தனிப்பட்ட உரிமை ஆகும். ஆனால் அந்த இறையியலை - ஆன்மிக உணர்வை ஒரு கூட்டம் அரசியலுக்கு பயன்படுத்தி அதன் மூலமாக குளிர்காயப் பார்க்கிறது. அரசியல் வேறு - ஆன்மிகம் வேறு என்பதை பகுத்தறிந்து பார்க்கும் பகுத்தறிவாளர்கள் தான் தமிழ்நாட்டு மக்கள். அந்த மக்களைக் குழப்ப சிலர் முயற்சித்து வரும் காலத்தில் வள்ளலார் அவர்கள் நமக்கு அறிவுத் திறவுகோலாகக் காட்சி அளிக்கிறார்கள்.
* சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்தியவர் அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளலார்.
* கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போகக் கடைசி வரை பாடியவர் அவர்.
* சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்
அலைந் தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே - என்று பாடியவர் வள்ளலார் பெருமான். அனைத்துயிரும் ஒன்று என்ற வள்ளல் பெருமானாரின் எண்ணத்தை இன்று நாம் விதைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 419 ஆவது வாக்குறுதியாக 'வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறோம். ''சாதி சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் அருட்பிரகாச வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கப் போதனைகளைப் போற்றும் வகையில் இது அமையும்'' என்று சொல்லப்பட்டு உள்ளது.
அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.சென்னையில் முதன்முதலாக வள்ளலார் நகரை உருவாக்கியவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். ஆட்சிக்கு வந்ததும் வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெரும் கருணை நாளாக அறிவித்துக் கொண்டாடி வருகிறோம். வள்ளலாரின் அறிவு ஒளியில் இதுபோன்ற பிளவுசக்திகள் மங்கிப் போவார்கள்.
இது சிலருக்கு பிடிக்கவில்லை.பெரியாரையும் போற்றுகிறார்கள் - வள்ளலாரையும் கொண்டாடுகிறார்கள் - என்பதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொள்கிறார்கள்.கோவில்கள் அனைத்தையும் பொன்போல போற்றிப் பாதுகாக்கிறார்களே - இவர்களை என்ன சொல்லி குற்றம் சாட்டுவது என்பதும் சிலருக்கு குழப்பமாக இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்னால் தெலுங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரை செய்ய வந்த பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் - தமிழ்நாட்டுக் கோவில்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள இந்து கோவில்களை, திமுக அரசு கைப்பற்றி ஆக்கிரமித்துள்ளது. கோவில் சொத்துகள் மற்றும் வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது" என்று பகிரங்கமாக மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் பேசி இருக்கிறார்கள். இந்தக் குற்றச்சாட்டை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன். பிரதமர் அவர்களுக்கு நான் எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனை ஒரு தமிழ்நாளிதல் தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அந்த நாளிதழின் நிர்வாகி ஒருவர், புகழ்பெற்ற திருக்கோவில் ஒன்றில் அறங்காவலர்களில் ஒருவராக இருக்கிறார். அப்படியானால் அவர், அந்த கோவிலை ஆக்கிரமித்துள்ளார் என்று அர்த்தமா? '' கோவில் உண்டியல் பணம் எங்கும் போகாது'' என்பது ஆகும். மிகப்பெரிய கட்டுரை என்பதால் அதனை வாசிக்க இயலாது. பெரிய எழுத்தில் அவர்கள் இரண்டு செய்திகளைச் சொல்லி இருக்கிறார்கள்.
அதனை மட்டும் நான் வாசிக்கிறேன்....
* கோவில் உண்டியல் வைக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை பக்தர்களின் காணிக்கைகள் பத்திரமாகத் தான் இருக்கின்றன. மிகுந்த முன்னெச்சரிக்கை உடனே கையாளப்படுகின்றன. காணிக்கை குறித்த பதிவேடுகள் எண்ணி முடிக்கப்பட்ட மறுநாளே அறநிலையத் துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு - அங்குள்ள பதிவேடுகளில் ஏற்றப்படுகின்றன. அதிலிருந்து ஒரு நகல் தணிக்கைப் பிரிவுக்கும் அனுப்பப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் இல்லாத அளவுக்குக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன"
இன்னொன்றையும் சொல்கிறார் அவர்...
'' ஒரு சிலர் அவரவர் கற்பனைச் சிந்தனைக்கு ஏற்றாற்போல உண்டியல் காணிக்கைகள் இந்த அமைச்சருக்கு பத்து சதவிகிதம் போகிறது - அந்த அமைச்சருக்கு 10 சதவிகிதம் போகிறது எனச் சொல்வது - அவர்களின் அறியாமையன்றி வேறில்லை"பொறுப்பு வாய்ந்த இந்திய நாட்டின் பிரதமர் அவர்கள் -தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியா? ஒரு மாநில அரசின் செயல்பாடு குறித்து - இன்னொரு மாநிலத்தில் போய் - பேசுவது முறையா?தர்மமா?
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கோவில்களை அரசு ஆக்கிரமித்தது போலவும் - வருமானங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது போலவும் பொய்யை இந்திய நாட்டின் பிரதமர் கட்டமைக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்?இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 3,500 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இது தவறா? 1000 கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம். இது தவறா?
1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதைத் தவறு என்கிறார் பிரதமர்?
பிரதமர் அவர்களின் பார்வையில் தான் தவறு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரையும் - எல்லார்க்கும் எல்லாம் என்ற பொதுத்தன்மையுடனான ஆட்சியை நடத்தி வருகிறோம். கருணையுள்ள ஆட்சியை நடத்தி வருகிறோம்.
அதனால் தான் கருணை வடிவிலான வள்ளல் பெருமானைப் போற்றுகிறோம். போற்றுகிறோம். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் வழியில் வாடிய உயிர்கள் அனைத்தையும் வாழ வைக்கும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்படும் என்ற உறுதியைத் தந்து விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.