சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் ராமசாமி சந்திரசேகர். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில், இந்த தம்பதிக்கு 2 வயதில் அருள் முருகன் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த சூழலில் ராமசாமி, குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய எண்ணியுள்ளார். அதன்படி இவர், இவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை உள்ளிட்டோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றனர்.
அங்கே சாமி தரிசனம் செய்து விட்டு, நேற்று இரவு சென்னை திரும்ப எண்ணியுள்ளனர். அதற்காக இவர்கள் அதிகாலை 2 மணிக்கு திருப்பதி பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது பேருந்துக்காக நடைமேடை மூன்றில் இந்த தம்பதி காத்திருந்தனர். அந்த சமயத்தில் அனைவருக்கும் தூக்கம் வந்ததால், அருகிலேயே படுத்து உறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், திடீரென்று எழுந்து பார்க்கையில், 2 வயது குழந்தை அருள் முருகன் காணாமல் போயுள்ளார். இதனால் பெரும் பதற்றமடைந்த குடும்பத்தினர், குழந்தையை சுற்றிலும் தேடியுள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் அருகில் இருக்கும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து காவல் அதிகாரிகள் குழந்தையை தேடும் பணியில் இறங்கினர்.
அப்போது அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் காணாமல் போன 2 வயது சிறுவனை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, சுதாகர் என்பவர் குழந்தையை கடத்திச் சென்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுதாகரை தீவிரமாக தேடி வந்த போலீசார் அவரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.
பின்னர் குழந்தையை அவனது பெற்றோரிடம் ஒப்படைந்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சுதாகரிடம் விசாரிக்கையில், திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், இந்த குழந்தையை வளர்க்க கடத்தியதாக கூறினார். எனினும் அதில் உள்ள உண்மைத்தன்மையை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கடத்தப்பட்ட 2 வயது குழந்தையை அவரது பெற்றோரிடம் ஒப்படைந்த திருப்பதி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.