சென்னை ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக மருத்துவ கல்வி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "முதுகலை மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு மதிப்பெண் பூஜ்ஜியமாக ஒன்றிய அரசு குறைத்துள்ளது. நீட் ஒரு தகுதித் தேர்வு தானே அதைப் படித்தால் நல்லது என கூறி நீட் தேர்விற்கும் முட்டுக் கொடுத்த அறிவுஜீவிகள் இப்போது பதில் சொல்லுங்கள்.
நீட் தேர்வால் தனியார் கல்லூரிகள் தான் பயன்பெறுகின்றனர் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. மேலும் நீட் தேர்வினால் எந்த உபயோகமும் இல்லை என்பதும் வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. அதனால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பாணையை ஆதாரமாக முன்வைப்போம். மேலும் இந்த அறிவிப்பானை உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறி உள்ளது. நீட் மெரிட் அடிப்படையில் வழங்கப்படும் வாய்ப்பு என கூறி வந்தனர். இப்போது அந்த மெரிட் எங்கு உள்ளது?.
நீட் தேர்வு தேவையற்றது என்பதை ஒன்றிய அரசே இதன் மூலம் ஒப்புக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். சட்டப்பூர்வமாகும் நீட் தேர்விலிருந்து நாம் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் வந்துள்ளது. எனவே நீட் தேர்வின் மதிப்பெண் பூஜ்ஜியம் என்ற அறிவிப்பின் மூலம் நீட்டை வைத்து யார் அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களுக்கே தெரியும்" என தெரிவித்துள்ளார்.