பழனி நெய்க்காரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் கோடம்பாக்கத்தில் தனது நண்பர் அறையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி இவரது செல்போன் எண்ணிற்குக் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
அதில், ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்குத் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியிலிருந்து ரூ. 9000 கோடி டெபாசிட் ஆனதாகக் குறுஞ்செய்தியில் வந்துள்ளது. தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.15 இருக்கும் நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார்.
பின்னர் தனது வங்கிக் கணக்கிலிருந்து நண்பருக்கு ரூ. 21 ஆயிரம் பணம் அனுப்பிய பிறகு தான் வங்கிக் கணக்கில் ரூ.9000 கோடி ரூபாய் பணம் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார்.
பிறகு தவறாகப் பணம் டெபாசிட் ஆனதை உணர்ந்த தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பணத்தைத் திருப்பி பெற்றுக் கொண்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பானதை அடுத்துத் தவறுதலாக டெபாசிட் ஆனதாக வங்கி நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது.