அ.தி.மு.க.வின் உட்கட்சி பூசலையும், ஊழல் கோப்புகளையுன் பயன்படுத்தி அதிமுகவை தங்கள் பக்கம் வலைத்துக்கொண்டது பாஜக. அதன்பின்னர் அதிமுக - பாஜக கூட்டணி தொடங்கியதில் இருந்தே இரண்டு கட்சிகளுக்கு இடையே அவ்வப்போது மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலின்போது கூட பா.ஜ.க பெயரைப் பயன்படுத்தினால் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய வாக்குக்கூட கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்ட அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் நரேந்திர மோடி பெயர் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவையை தவிர்த்தே பிரச்சாரம் செய்தது.
மேலும் அண்ணாமலை போன்ற பா.ஜ.கவினர், தாங்கள்தான் எதிர்க்கட்சி என்றும் கூறி வருகின்றனர். இது அ.தி.மு.கவிற்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அண்ணாமலையில் நடவடிக்கைக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். தொடர்ந்து இரு தரப்பினர்க்கும் இடையே கருத்து மோதல்கள் இருந்து வரும் நிலையில் இரண்டு கட்சியினரும் வார்த்தை போர் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா குறித்து அவதூறு செய்தி பரப்பியது தமிழ்நாட்டு மக்களிடம் கண்டனங்களை எழுப்பியது. தொடர்ந்து திமுகவும் அண்ணாமலைக்கு கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், அதிமுகவும் அண்ணாமலைக்கு கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்தது.
இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், அண்ணாவை பற்றிப் பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது. கூட்டணியிலிருந்து கொண்டு இப்படித் தரம் தாழ்ந்து பேசுவதா?. திட்டமிட்டே அண்ணாவை இழிவுபடுத்துகிறார். நீங்கள் உங்களது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார்.
மேலும் அதிமுக நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாரும் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்தது கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் மேடையில் பேசிய மற்றொரு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணாவை பற்றி யாரேனும் அவதூறாக பேசினால், நாக்கு துண்டாக்கப்படும் என்று கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே அண்ணாமலையும் அதிமுகவை இழிவாக பேசியதுடன், சி.வி சண்முகத்தை குறிப்பிட்டு, திருடனுக்கு போலீசை பார்த்தால் பயம் வரத்தான் செய்யும் என்றும், 10 ஆண்டுகளாகத் துப்பாக்கி பிடித்த கை இது. எனக்கு இவர் பாடம் எடுக்க வேண்டாம் என்றும் பேசினார். அதோடு அதிமுகவினரை பற்றியும் இழிவாக பேசினார்.
இருதரப்பினருக்கும் இடையே இருக்கும் வார்த்தை போர் கடுமையாக முற்றிய நிலையில், தற்போது ஜெயக்குமார், அதிமுக - பாஜக கூட்டணியை முடித்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளரிடம் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், "பெரியார், அண்ணாவைப் பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது. அவர் தனியாகப் போட்டியிட்டால் நோட்டாவை தாண்ட மாட்டார். தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர் அண்ணாமலை. அ.தி.மு.க-வினர் இனிமேல் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். பா.ஜ.க-வை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
எங்களை வைத்துதான் பா.ஜ.க-வுக்கு அடையாளமே. இனியும் பொறுத்துக்கொள்வதாக இல்லை. எனவே. கூட்டணியைப் பொறுத்தவரை பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இல்லை. இதுதான் எங்கள் நிலைப்பாடு. கட்சியின் கருத்தும் கூட. அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரும்." என்று எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து கடும் சிக்கலில் சிக்கி, பின்னர் அதற்கு வருத்தம் தெரிவித்தார். இந்த சூழலில் மீண்டும் தனது வாயை வைத்து சும்மா இல்லாமல், பேரறிஞர் அண்ணாவை விமர்சித்து திமுக, அதிமுக, தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவர் மத்தியிலும் வாங்கி கட்டிக்கொண்டு வருகிறார்.
ஒரு பக்கம் ஜெயக்குமார் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, அதிமுக எம்.பி., தம்பிதுரை, “ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிரதமர் மோடியும் முதல்வராக இருந்த போது எடப்பாடி பழனிச்சாமியும் இணைந்து செயல்பட்டனர்” என்று தெரிவித்துள்ளார். இதனால் ஒரே கட்சியில் இரண்டு நிலைப்பாடு உள்ளது அம்பலமாகியுள்ளது என்பது கூடுதல் தகவல்.