தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்ற சிறப்பு மிக்க சட்டத்தை கடந்த 1970ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் சட்டப்பேரவையில் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றினார்.
அர்ச்சகர்களாக ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த நிலையில் தற்போதும் பெண்களும் அர்ச்சகர்களாக உருவெடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் முதல் பெண் அர்ச்சகராக, சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஓதுவார் பணிக்கு சுஹாஞ்சனா என்ற பெண் கடந்த 2021-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், திருவரங்கத்தில் உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்ற கிருஷ்ணவேணி, ரஞ்சிதா, ரம்யா ஆகியோர் ஒரு வருடம் பயிற்சி முடிந்து அர்ச்ககர் சான்றிதழை பெற்றுள்ளனர். அர்ச்சகர் பயிற்சி முடித்த பெண்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் திருக்கோவில்களில் பணியிடம் வழங்கப்படவுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தில் அடுத்தடுத்து பெண்களும் ஓதுவாராக நியமிக்கப்பட இருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்" என தெரிவித்துள்ளார்.
இதேபோன்று கனிமொழி எம்பி, " அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு தேர்ச்சிபெற்றிருக்கும் ரம்யா, கிருஷ்ணவேணி, ரஞ்சிதா ஆகியோருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். பெண்கள் நுழைய உரிமை மறுக்கப்பட்ட இடத்திலிருந்து இனி ஒலிக்கப் போகும் அம்மூன்று பெண்களின் குரல்களும் சமூகநீதி வரலாற்றின் புதிய அத்தியாயமாயிருக்கும். இதைச் சாத்தியப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும் வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.