நாமக்கல் மாவட்டம் பரமத்தில் வேலூர் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் டேவிட் என்பவர் நேற்று இரவு சிக்கன் பிரியாணி ஒன்று பார்சல் வாங்கி வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் ஆசை ஆசையாக வாங்கி வந்த பிரியாணியை சாப்பிட பார்சலை திறந்த போது அதில் செத்து போன வெட்டுக்கிளி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே பார்சலை எடுத்துக் கொண்டு பிரியாணி வாங்கிய கடைக்கு மீண்டும் சென்றுள்ளார்.
”என்ன உங்கள் கடையில் வாங்கிய பிரியாணியில் இப்படி வெட்டுக்கிளி இருக்கிறது” என உணவக உரிமையாளரிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர் சரியாகப் பதில் சொல்லாமல் அலட்சியமாக இருந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் இதுபற்றி தகவல் அறிந்துவந்த போலிஸார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் படி டேவிட்டிடம் வலியுறுத்தி அங்கிருந்து அவரை அனுப்பிவைத்தனர். இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியாணியில் வெட்டுக்கிளி இருந்த சம்பவம் அப்பகுதி உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.