பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் பரத். 22 வயதான இவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்த சூழலில் தனது நண்பர்களுடன் வெளியூர் பயணம் செல்ல எண்ணிய இவர், அதன்படி கடந்த 20 நாட்களுக்கு முன்பாக பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்ட இவர், அங்கிருக்கும் டாட்டூ என்று சொல்லப்படும் பச்சை குத்தும் கடை ஒன்றை பார்த்துள்ளார்.
தானும் டாட்டூ குத்திக்கொள்ள ஆசைப்பட்ட இவர், தனது கழுத்து பகுதியில் நங்கூரம் உருவத்தை டாட்டூவாக குத்திகொண்டுள்ளார். இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருந்த இவர், சுற்றுலா முடிந்து ஊர் திரும்பியுள்ளார். அங்கே வழக்கம்போல் தனது வயலில் விவசாய பணிகளை செய்து வந்துள்ளார். இந்த சூழலில்தான் இவர் பச்சை குத்திய இடத்தில் திடீரென அரிப்பு ஏற்பட்டு புண் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது அக்குள் பகுதிகளில் புண் பரவியுள்ளது. இதனால் அவருக்கு கழுத்து பகுதியில் தொடர்ந்து வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மிகுந்த வலியுடன் இருந்த அவரை பெற்றோர் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அங்கே உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து அவருக்கு இருந்த கட்டியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். எனினும் அவரது உடல்நிலை சரியாகாமல் இருந்ததால் தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கேயும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து அவரது இந்த நிலைக்கு காரணம் அவர் குத்திய டாட்டூ என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கழுத்தில் டாட்டூ குத்தியதால் அவரது உடலில் உள்ள இரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், இதனால் அவருக்கு குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனாலே எந்த சிகிச்சையும் அவரது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்த இளைஞர் பரத் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.