உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் தனக்கு கடுமையான காய்ச்சல் அடிப்பதாக கூறி மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் எடுத்தும் அனைத்தும் சரியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவர் மிகவும் சோர்வாகவும், மெலிவாகவும் ஆனதால், மீண்டும் மருத்துவரை அணுகியுள்ளார்.
அங்கு அவருக்கு எச்.ஐ.வி., டெஸ்ட் எடுக்க முடிவு செய்து எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு எச்.ஐ.வி. இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதனால் பதறிப்போன அவர், மீண்டும் டெஸ்ட் எடுக்க கூறியபோதும், அப்போதும் அவருக்கு பாசிட்டிவ் என்று வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரித்தபோது, கடந்த சில தினங்களுக்கு முன்பு டாட்டூ குத்தியதாக தெரிவித்தார்.
இந்த இளைஞர் வருவதற்கு சில மாதங்கள் முன்பு, இளம்பெண் ஒருவர் உடல்நிலை கோளாறு காரணமாக மருத்துவமனையை அணுகிய போது, அவருக்கும் எச்.ஐ.வி., உறுதி செய்யப்பட்டது. அவருக்கும் இதே போல் டாட்டூ குத்தி கொண்ட பிறகே எச்.ஐ.வி., இருப்பது தெரிய வந்தது. இந்த இரண்டு சம்பவத்திலும், டாட்டூ குத்தியதால் இருவருக்கும் எச்.ஐ.வி., கண்டுபிடிக்கப்பட்டதால், இதற்கு டாட்டூ தான் காரணம் என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர்.
அதாவது பச்சைகுத்துதல் என்று சொல்லப்படும் டாட்டூ போடும் ஊசியானது, பல இடங்களில் ஒருவருக்கு பயன்படுத்தப்படும் அதே ஊசியை தான் மற்றவர்களுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த ஊசியை அவர்கள் முறையாக சுத்தம் செய்யாமல் வைத்திருந்தால், இதுபோன்ற சம்பவங்களை நிகழலாம் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் இரத்தம் மூலம் மட்டுமே பரவும் இந்த நோய், அந்த ஊசியில் ஒருவரது இரத்த நாளங்கள் படிந்து இருப்பதை அறியாமல், அதே ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தும்போது இது போன்று எச்.ஐ.வி உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.