காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த ஒரகடம் பகுதியில் ராயல் என்பீல்டு இருசக்கர வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்குத் தயாரிக்கும் வாகனங்கள் கண்டெய்னர் லாரி மூலமாகவும், சரக்கு ரயில்கள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரகடம் தொழிற்சாலையில் இருந்து 88 ராய என்ஃபீல்டுகளை ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று ஜார்கண்ட் மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றது.
இந்த கண்டெய்னர் லாரி ஒரகடம் அருகே காரணித்தாங்கல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்துள்ளது. உடனே ஓட்டுநர் லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி நிறுவனத்திற்குத் தகவல் தொடுத்துள்ளார். அவர்கள் போலிஸாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி கண்டெய்னர் லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் கண்டெய்னர் லாரியின் கதவைத் திறந்து பார்த்தபோது அதில் இருந்த 88 வாகனத்தில் 58 என்ஃபீல்டு வாகனங்கள் முற்றாக எரிந்து நாசமானது.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டெய்னர் லாரியின் பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.