சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த பாலம்மாள் என்பவர் கடந்த 10 வருடங்களாக டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தை வாங்கி விடுமுறை தினங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவர் குறித்து காவல்துறையினர் தகவல் தெரியவந்த நிலையில், அவரை அடிக்கடி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து வந்தார்கள்.
இந்த சூழலில் இந்த பெண் தொடர்ந்து இதே வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருவது காவல் அதிகாரிகளுக்கு தெரியவந்த நிலையில், அந்த நிலையை மாற்ற நினைத்துள்ளனர். இதனால் இது குறித்து அந்த பெண்மணியிடம் காவல்துறையினர் பேசியபோது அந்த பெண்மணி எனக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது என கூறியுள்ளார்.
இதனால் அவருக்கு வேறு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் அவரின் இந்த நிலை மாறும் எனக் கருதிய காவல்துறை அதிகாரிகள், அவருக்கு ஒரு சாப்பாடு கடை வைத்து தருவதாக கூறியுள்ளனர். இதனை அந்த பெண் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தள்ளுவண்டி மற்றும் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மற்றும் உபயோக பொருட்களை ஐஸ் ஹவுஸ் காவல் ஆய்வாளர் விஜய கிருஷ்ணராஜ் தன்னுடைய சொந்த செலவில் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் இந்த செயலுக்கு ராயப்பேட்டை உதவி ஆணையர் பாலமுருகன் மற்றும் இதர காவலர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்த அந்த பெண் இனி விடுமுறை நாட்களில் மதுபானங்களை விற்கமாட்டேன் என்றும், இனி உணவு கடையை சிறப்பாக நடத்துவேன் என்றும் அந்த பெண் காவல் அதிகாரிகளுக்கு உறுதி அளித்துள்ளார். குற்றவாளிகள் மனம் திருந்தி வேறு வேலை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை வாழ முடியும் என்பதை நிரூபித்த காவல் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.