முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை இழிவு படுத்துவதா? தினமலர் நாளேட்டுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.”
என்று பசியின் கொடுமை பற்றி தமிழ் மூதாட்டி அவ்வை சொன்னார்.
பள்ளிக்குப் போகும் குழந்தைகள் காலை உணவு இன்றி பசியோடு சென்றால் உடல் சோர்வும் மனச்சோர்வும் அடைந்து கல்வி கற்பதில் பின்னடைவு ஏற்படும்.
இதனைக் கருத்தில் கொண்டுதான் அரசு பள்ளிகளில் படித்து வரும் இலட்சக்கணக்கான ஏழை எளிய குடும்பத்து பிள்ளைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, மேலும் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
நீதிக் கட்சி காலத்திலேயே சர்.பிட்டி. தியாகராயர் சென்னை மாநகர தந்தையாக இருந்த போது 1928 ஆம் ஆண்டு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
அதன் பிறகு பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சியிலும், பின்னர் வந்த எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் மதிய உணவு திட்டம் சிறப்பாக நடைமுறைப் படுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான ஏழை எளிய குழந்தைகள் பசியின்றி பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் நிலை உருவானது. சத்துணவில் முட்டை வழங்கும் திட்டத்தை டாக்டர் கலைஞர் செயல்படுத்தினார்.
இந்நிலையில் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காலை உணவு திட்டத்தைக் கொண்டு வந்து தமிழ்நாடு கல்வித் துறையில் முன்னேற வழிவகை செய்தார் இலட்சக்கணக்கான குழந்தைகள் பயன்பெறும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தினமலர் நாளேடு இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
சமூக நீதிக்கு எதிரான ஆணவ ஆதிக்க ஆரிய சனாதன மனப்பான்மை தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி மூலம் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. தினமலரின் திமிருக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். பள்ளிக் குழந்தைகளின் காலை உணவு திட்டத்தை இழிவு படுத்திய தினமலர் நாளேடு மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.