தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி 110-ன் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை அடுத்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரையிலுள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் 15.9.2022 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட அதிகரித்துள்ளது.
இதனால் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் 13.1.2023 அன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்காக 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கடந்த 25-ம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவுப்படுத்தபட்டது. அப்போது 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறி, அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் குழந்தைகளும், பெற்றோர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். வயிற்றுப் பசியை தீர்த்தாலே அறிவுப்பசியும் வரும் என்ற அருமையான நோக்கத்தோடு இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் மட்டுமல்ல பல்வேறு அரசியல் தலைவர்கள் என நாடு முழுவதும் இருந்து வரவேற்பு இருந்து வருகிறது. ஆங்கில இதழ்களும் இதற்கு பாராட்டுகள் தெரிவித்து வருகிறது. அண்மையில் கூட தினத்தந்தி நாளிதழ் இந்த திட்டத்தை பாராட்டி தலையங்கம் வெளியிட்டது.
இந்த நிலையில், தற்போது 'தினமலர்' நாளிதழ் இந்த திட்டத்தை விமர்சித்து தலைப்பு செய்திகளை வெளியிட்டது. தினமலர் வெளியிட்ட அந்த செய்திக்கு தற்போது தமிழ்நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி அரசு செயல்படுத்தும் திட்டங்களை விமர்சிக்கும் தினமலர் தற்போது, குழந்தைகளுக்கு உள்ள நல்ல திட்டத்தை விமர்சித்து தலைப்பு செய்திகளை வெளியிட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், "உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம். 'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.