5.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளித்ததாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்ததையடுத்து, அதிலும் ஒன்றிய அரசு மெகா மோசடித்தனம் செய்துள்ள செய்தி கூட விரைவில் வரலாம் என்று தினகரன் நாளேடு தலையங்கம் எழுதியுள்ளது.
அதுவருமாறு :-–
2022 அக்டோபர் முதல் இப்போது வரை 5.50 லட்சம் பேருக்கு வேலை வழங்கி விட்டதாக முழங்கியிருக்கிறது மோடி அரசு. இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்து இருக்கிறார்கள். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்ற வாக்குறுதி தற்போது 10 லட்சம் அளவுக்கு சுருங்கிப்போய் இருப்பது பிரதமர் மோடியின் ஆகச்சிறந்த நிர்வாகம் தான். ஆனால் இப்போது வேலைவாய்ப்பு வழங்கியிருப்பதாக கூறப்பட்டு இருக்கும் 5.50 லட்சம் பேரையும் எப்படி தேர்வு செய்தார்கள், எந்த தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டது என்று ஆராய்ந்தால் இன்னும் ஒரு மெகா மோசடி வெளியே வரும் போல் தோன்றுகிறது.
ஒன்றிய அரசின் இந்த வேலை வழங்கும் திட்டம் ரோஜ்கார் மேளா என்று அழைக்கப்படுகிறது. எல்லைப் பாதுகாப்பு படை, சிஏபிஎப், சிஆர்பி எப், சிஐஎஸ்எப், எஸ்எஸ்பி, ஐடிபிபி உள்ளிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்வேறு காவல் பணிகளிலும், ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளிலும் இந்த 5.50 லட்சம் பேருக்கும் வேலை வழங்கியிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
ஒன்றிய அமைச்சர் பி.எல். வர்மா கூறுகையில், ‘இதுவரை 5.50 லட்சம் பேருக்கு வேலை வழங்கி விட்டோம். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கி விடுவோம்’ என்கிறார். அதிலும் குறிப்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் அமைப்புகளில் காலியாக இருந்த 1 லட்சம் பணியிடங்களில் இதுவரை 87 ஆயிரம் பணியிடங்கள் கடந்த அக்டோபர் முதல் இப்போது வரை நிரப்பி விட்டதாக கணக்கு காட்டப்பட்டு இருக்கிறது. டிசம்பர் மாதத்திற்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் அதற்குள் 4.50 லட்சம் பணியிடங்கள் நிரப்ப வேண்டும். எப்படி நிரப்ப முடியும்?. கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த மாதம் வரை 5.50 லட்சம் பேருக்கு எப்படி வேலை வழங்கி இருக்க முடியும்? அதை எப்படி வழங்கினார்கள் என்பது தான் இன்று எழுந்துள்ள கேள்வி.
5.50 லட்சம் பேரை தேர்வு செய்ய ஒன்றிய அரசு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட வேண்டும். விண்ணப்பம் பெற வேண்டும். தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, விண்ணப்பித்த நபர்களை வரவழைத்து தேர்வு நடத்தப்பட வேண்டும். அதன்பின் நீ ஆன்சர் வெளியிட்டு, தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். மோடி அரசு இந்த 11 மாதங்களில் நிரப்பி உள்ளதாக அறிவித்துள்ள 5.50 லட்சம் காலியிடங்களுக்கு எப்போது இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டன ?எப்போது தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது? எத்தனை பேர் விண்ணப்பம் செய்தார்கள், எத்தனை பேர் எந்தெந்த தகுதி அடிப்படையில் நியமனம் செய் யப்பட்டார்கள், தேர்வு செய்யப்பட்ட 5.50 லட்சம் பேர் பட்டியல் எங்கே என்றெல்லாம் கேள்வி எழுப்பினால் சிஏஜி அறிக்கையில் வெளியானது போஸ் வேலை வழங்குவதிலும் இந்த நாட்டின் இளைஞர்களை ஏமாற்றிய மெகா மோசடித்தனம் வெளியே வரலாம்.
இதில் மோடி அரசின் கீழ் கடந்த 9 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி, வர்த்தகம், போக்குவரத்து உள்ளிட்ட 9 துறைகளில் 1.50 கோடிக்கும் அதிகமான வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தகவல் வெளியிட்டுள்ளார் ஒன்றிய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ். இப்போது தேர்வானவர்கள் பட்டியலே தெரியாத போது 2030ம் ஆண்டில் சுற்றுலாத்துறையில் மட்டும் 14 கோடி வரை வேலைவாய்ப்பு உருவாகும் என்று ஆசை காட்டியிருக்கிறார் நமது பிரதமர் மோடி.
இவ்வாறு தினகரன் நாளேடு தலையங்கம் எழுதியுள்ளது.