சென்னை அயனாவரம் மேட்டுத் தெருவில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். 52 வயதான அந்த பெண் கணவரை இழந்து வாடும் நிலையில், தனது ஒரே மகளுடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் மகள் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது வீட்டுக்கு கீழே சத்திய மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். 42 வயதான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். சத்திய மூர்த்தி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதோடு பாஜகவில் மத்திய சென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதி பகுதிச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்த சூழலில் ஏற்கனவே திருமணமான சத்தியமூர்த்தி, ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணொடு பேசி வந்துள்ளார். இவர்களது பழக்கம், சத்தியமூர்த்தியின் மனைவிக்கு தெரியவரவே, அவர் இந்த இளம்பெண்ணிடம் சண்டையிட்டுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், தனது மகளை கண்டித்துள்ளார். தொடர்ந்து தனது மகளுடன் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதனால் சத்தியமூர்த்திக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி அந்த பெண்ணின் கையை முறுக்கி அடித்து உதைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து அங்கே சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண், இந்த சம்பவம் குறித்து பாஜக பிரமுகர் சத்தியமூர்த்தி மீது அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றவாளியான சத்தியமூர்த்தி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் சம்பவம் குறித்து எழுதிவாங்கி கொண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தனது மகளுடன் பேசுவதை நிறுத்துமாறு கூறிய தாயை சரமாரியாக தாக்கிய பாஜக பிரமுகர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.