இந்தியாவில் 2014ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோது வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.417 ஆக இருந்தது. ஆனால் படிப்படியாக ரூ.1118 ஆக உயர்ந்துள்ளது. இந்த விண்ணை முட்டும் விலை உயர்வால் குடும்பத் தலைவிகள் கடும் அவதிகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த கடும் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. அப்போது எல்லாம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் என மோடி அரசு கூறியது. பின்னர் கச்சா எண்ணெய் விலை குறைந்த பிறகும் கூட சிலிண்டர் விலையை மோடி அரசு குறைக்கவில்லை.
இந்நிலையில் 5 மாநிலங்களில் தேர்தல் நெருங்கும் நிலையில், வீட்டு உபயோ சமையல் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது. மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு தேர்தல் நாடகம் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்துள்ளனர். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "கடந்த இரண்டு மாதங்களில் ’இந்தியா’ கூட்டணியால் இரண்டு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன, இன்று, சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்பட்டுள்ளது. இது தான் இந்தியா கூட்டணியின் பலம்" என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, "சுமைதாங்கும் ஒட்டகத்தை ஏமாற்றுவதற்காகச் சிறு துண்டை கீழ் வைப்பது போல் வைத்து ஏமாற்றுவார்கள் அதே போன்று தற்போது சிலிண்டர் விலையினை குறைத்திருக்கிறார்கள். இது ஒரு ஏமாற்று வேலை. மக்களை தொடர்ந்து ஏமாற்ற முடியாது என்பதை மோடி விரைவில் அறிவார்" என தெரிவித்துள்ளார்.
மேலும் சி.பி.ஐ மாநிலச் செயலாளர் முத்தரசன், "தேர்தலுக்காக ஒன்றிய அரசு பொது மக்களிடம் வியாபாரம் செய்கிறது. 5 மாநில தேர்தலுக்காக சிலிண்டர் விலை குறைத்து நாடகமாடுகிறது ஒன்றிய அரசு" என விமர்சித்துள்ளார்.