உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மீக சுற்றுலாவுக்கு பயணிகள் சுற்றுலா இரயிலில் பயணித்து வந்தனர். ஆகஸ்ட் 17-ம் தேதி கிளம்பிய பயணிகள் தென் மாநிலங்களில் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக சுமார் 60-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இந்த சூழலில் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
காலை அனைவருக்கு டீ போட வேண்டும் என்று இரயிலில் இருக்கும் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தியபோது, அது வெடித்து பேட்டி ஒன்றில் தீ பற்றியுள்ளது. சுமார் 5.20 மணியளவில் பற்றிக்கொண்ட அந்த தீ தொடர்ந்து அடுத்தடுத்த பெட்டிகளில் பரவ, தீ மளமளவென பற்றத் தொடங்கியுள்ளது. இவ்வாறு அனைத்து பெட்டிகளில் தீ பரவவே அதில் சிக்கி பயணிகள் பெரும் அவதிக்குள்ளானர்.
தொடர்ந்து இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கவே, அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுவரை சுமார் 10 மேற்பட்ட பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் பி.மூர்த்தி நேரில் ஆய்வு செய்து வருகிறார். தீ விபத்துக்கான காரணம் சிலிண்டர் வெடிப்பு என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி பயணிகள் தடையை மீறி அவர்கள் கொண்டு வந்த சிலிண்டரை இரயிலுக்குள் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் வட மாநிலங்களை போல் கொள்ளையர்கள் ஏறிவிடுவார்கள் என பெட்டியை பூட்டி வைத்திருந்துள்ளனர். இதனால் தீப்பற்றியபோது அவர்களால் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இரயில் பெட்டிக்குள் ஆய்வு மேற்கொண்டபோது, விறகு கட்டைகள், எண்ணெய் டின் உள்ளிட்ட பொருட்களும் இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியளித்து தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. தொடர்ந்து உயிரிழந்தோரின் வட மாநில குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே தெற்கு இரயில்வே அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் மதுரை ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு ஆய்வுக்கு வந்த தெற்கு ரயில்வே ஏ.டி.ஜி.பி வனிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், “ரயில் தீ விபத்தில் சதி வேலைக்கான சாத்தியம் எதுவும் இல்லை. தேநீர் போட்டுக்கொண்டு இருந்த போது சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. விறகுகள், அடுப்புக்கரி மூட்டை உள்ளிட்டவை உள்ளே இருந்துள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து தனியாக தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
சுற்றுலா ஏற்பாடு செய்த பாசின் டிராவல்ஸ் உரிமையாளரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறந்த 9 பேரில் 8 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனிடையே இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டு வருகிறது. மதுரையிலிருந்து சென்னை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் உத்திரப்பிரதேசம் கொண்டு செல்லப்படவுள்ளது.
இந்த விசாரணையில் விபத்து பற்றி அறிந்த தெரிந்த பொதுமக்கள், தங்களுக்கு தெரிந்த தகவல்களை பொது விசாரணை ஆணையரிடம் நேரடியாக தெரிவிக்கலாம். மேலும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை ரயில்வே பாதுகாப்பு ஆணையர், தென்சரகம், ரயில் சன்ரக்ஷா பவன், (இரண்டாவது மாடி) பெங்களூரு - 560023 என்ற முகவரிக்கும் அனுப்பலாம்.