நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரை:-
இந்த மாவட்டங்கள் பொதுவாகவே வேளாண்மை சார்ந்த மாவட்டங்கள். அதனால்தான், வரலாற்றுக்காலம் தொட்டு தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்ற சிறப்பை இந்தப் பகுதி பெற்றிருக்கிறது. இந்த மாவட்டங்களுடைய வளர்ச்சி என்பது வேளாண்மை சேர்த்து மற்ற ஒட்டுமொத்த வளர்ச்சியை அடைந்தாக வேண்டும். நாம் வளர்த்தாக வேண்டும். அத்தகைய வளர்ச்சிக்காக நமது அரசு இந்த மாவட்டங்களில் தொழில், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதின் அவசியத்தை உணர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நான் அடிக்கடி குறிப்பிடுவது போல், எந்த ஒரு திட்டமும் அதனுடைய நோக்கத்தை அடைய, தொடர்ச்சியான ஆய்வுகள் அவசியம். அந்த அடிப்படையில் தான், மக்களுக்கு நெருக்கமாக சென்று, திட்டங்களுடைய செயலாக்கத்தை கண்காணிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு, “கள ஆய்வில் முதலமைச்சர்”என்ற இந்தத் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினேன்.
அரசினுடைய திட்டங்களின் செயலாக்கத்தை சந்திக்கக்கூடிய சவால்கள் மற்றும் அது தொடர்பாக, நீங்கள் தரக்கூடிய ஆலோசனைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்கின்ற நோக்கத்தில்தான், மாவட்ட அளவில் இத்தகைய ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
பொதுவாகவே, முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கக் கூடியவர்கள் துறைச் செயலாளர்களிடம் மட்டும் நேரடியாக கேட்டுப் பேசி, ஆலோசனைகளையும், கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளமுடியும். ஆனால், அதையும் தாண்டி செயலாற்றவேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, இதுவரை வேலூர், சேலம், மதுரை மற்றும் விழுப்புரம் ஆகிய 4 இடங்களில் மொத்தம் 17 மாவட்ட அதிகாரிகளோடு நேரடி ஆலோசனை நடத்தி முடித்திருக்கின்றேன். அந்த வரிசையில், இன்றைக்கு தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட அதிகாரிகளாகிய உங்களை சந்திக்கின்றேன்.
முதன்முதலாக, வேலூருக்குப் சென்றபோது நடத்திய கள ஆய்வுக்கும் – அடுத்தடுத்த மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை நான் பார்க்கிறேன். வேலூரில் நானோ, அமைச்சர்களோ, துறைச் செயலாளர்களோ என்ன மாதிரியான கேள்விகளை முன்வைத்தோம் என்று தெரிந்து கொண்டு, மற்ற மாவட்டத்தின் அதிகாரிகள் அதை தங்களுடைய மாவட்டத்தில் முடித்து வைத்திருக்கிறார்கள். இதுதான் நான் எதிர்பார்க்கின்ற மாற்றம். அந்த மாற்றம், இரண்டாவது கூட்டத்திலேயே நிறைவேறத் தொடங்கிவிட்டது.
நம்முடைய மாவட்டத்திற்கு முதலமைச்சர் வந்தால், இதையெல்லாம் கேட்பார் என்று நினைத்து, ஓரளவுக்கு செயல்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதை இந்தத் திட்டத்தால் நடக்கின்ற நல் விளைவாகதான் நான் பார்க்கின்றேன்.
நான்கு மாவட்ட அலுவலர்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது,
• மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்,
• கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்,
• அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்,
• முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டம்
• மக்களைத் தேடி மருத்துவம்
போன்ற திட்டங்கள் இந்த மாவட்டங்களில் சிறப்பான முறையில், எந்த ஒரு தொய்வும் இல்லாமல் செயல்படுத்தப்படவேண்டும்.
100 நாள் வேலை உறுதி திட்டத்தின்கீழ் வேலை வழங்கக் கூடிய சராசரி நாட்களை உயர்த்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்த மாவட்டங்களில் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு, இன்னும் முடிக்கப்படாமல் இருக்கின்ற பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுங்கள்.
• வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டு வருகின்ற வட்டாரங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி வேளாண் பொருட்களின் உற்பத்தியை பெருக்குவதற்கு உடனடி முயற்சிகள் தேவை.
• காய்கறிகள் மற்றும் கனிகள் உற்பத்தி பெருக்கத்திற்கும் உரிய நடவடிக்கை எடுங்கள்.
• தென்னை மரங்கள் அதிகம் நிறைந்துள்ள இந்த மாவட்டங்களில், சமீப காலமாக, இயற்கை சீற்றத்தாலும், உரிய வருமானம் இல்லாததாலும், சில வட்டாரங்களில் தென்னை மரங்களின் பரப்பு முந்தைய காலக்கட்டங்களை விடவும் வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது என்று நான் உணர்கிறேன், அதற்காக கவலைப்படுகிறேன். அதனால், தென்னை மரங்களின் பரப்பை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள உடனடியாக செய்யுங்கள்.
• உற்பத்தி அதிகரித்தால் மட்டும் போதாது. விளை பொருள்களுக்கான உரிய சந்தை விலையும் உழவர்களுக்குக் கிடைக்கவேண்டும். உழவர்கள் தங்களுடைய விளைபொருட்கள் லாபகரமான முறையில் விற்பனை செய்வதற்கு வேண்டிய e-NAM (இ-நாம்) உள்ளிட்ட சந்தை வசதிகளை பெருக்க வேண்டும்.
• அதே நேரத்தில், இந்த மாவட்டங்களின் வளர்ச்சி என்பது வேளாண்மையை மட்டும் சார்ந்து இல்லாமல், தொழில் சார்ந்தும் இருக்க வேண்டும்.
• மாவட்ட ஆட்சித் தலைவர்களாகிய நீங்கள், இதை உணர்ந்து மாவட்டம் முழுவதற்குமான அரசின் பொதுவான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும், உங்கள் மாவட்டத்திற்கு உரிய தனிப்பட்ட தேவைகளை கவனத்தில் வைத்து, அதனடிப்படையில், அரசுக்குத் திட்டங்களை எடுத்துச் சொல்லி, அதற்கான தகுந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
• பட்டா மாறுதலுக்காக வந்த விண்ணப்பங்களில் நிலுவையில் இருப்பதில் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக பட்டா வழங்கவேண்டும்.
• பட்டாவில் திருத்தம் கோரும் விண்ணப்பங்களை உடனடியாக செய்து தரவேண்டும்.
• சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால், குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக சான்றிதழ்கள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
• “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தை மார்ச் 16-ஆம் தேதி முதல் அமல்படுத்தி வருகிறோம். ஆனால், இந்த மாவட்டங்களில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரம் சொல்கிறது. இந்தத் திட்டத்தை கருணை உள்ளத்தோடு நீங்கள் கவனிக்கவேண்டும்.
சில துறை சார்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்களை நினைவூட்டுகிறேன்.
• நகர்ப்புற சாலைப் பணிகளில் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் முன்னேற்றம் இல்லை என்று ரிப்போர்ட் சொல்கிறது.
• பள்ளிக் கல்வித் துறையைப் பொறுத்தவரையில், பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசியாக இருக்கிறது. இது கவலைக்குரியது. இதை அடுத்த ஆண்டுக்குள் மாற்றியாகவேண்டும் - இவை இரண்டிலும் மாவட்ட ஆட்சியர்கள் அதிக அக்கறை காட்டவேண்டும்.
பொருளாதார வளர்ச்சிக்கு, அரசுத் திட்டங்கள் மட்டுமில்லாமல், வங்கிகள் மூலமாக வழங்கப்படுகின்ற பல்வேறு கடனுதவிகள் எவ்வளவு அவசியம் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். அத்தகைய கடனுதவிகள் வழங்குவதில், குறிப்பாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடனுதவி வழங்குவதில் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும்.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னால், நிலுவையில் இருக்கின்ற சாலைப் பணிகளை முடித்து, மக்களுடைய இன்னல்களை போக்கவேண்டும். எனவே, ஆய்வுக்கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில், விரைந்து செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட காலக்கட்டத்திற்குள் எல்லா பணிகளையும் முடிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு உரிய தயாரிப்புடன் வந்து, இறுதி வரை ஆர்வத்தோடு பங்கேற்று, உங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை தெளிவாக சொல்லி, பல்வேறு கருத்துகளை இங்கே பகிர்ந்து கொண்ட அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன்.
தொடர்ந்து மக்களிடம் சென்று, அவர்களோடு இருந்து அவர்களின் பிரச்சனைகளை சரி செய்து, தேவைகளை நிறைவேற்றி, நமது அரசுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் உரிய மனநிறைவு கிடைக்கும் வகையில் செயல்படுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் சிறப்பான செயல்பாட்டுக்கு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும்.
அதிகாரிகளும் - அமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் - மாவட்ட அலுவலகங்களும் - தலைமைச் செயலகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் தான் நல்லாட்சியின் இலக்கணம்.
நாம் அனைவரும் “மக்கள் சேவகர்கள்” என்பதை மனதில் வைத்து செயலாற்றுவோம்! நன்றி, வணக்கம்.