தமிழ்நாடு

சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் நேரில் உதவி கேட்ட மூதாட்டி.. உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறை !

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், மனு கொடுத்த 86 வயது மூதாட்டியின் வீட்டிற்கு துணை ஆணையாளர் நேரில் சென்று விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் நேரில் உதவி கேட்ட மூதாட்டி.. உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், நேற்றுகாவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தபோது, வயதான மூதாட்டி ஒருவர் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் மனு கொடுத்தார்.

காவல் ஆணையாளர் மூதாட்டியின் வயதை கேட்டபோது, தனக்கு 86 வயது எனவும், எனது பெயர் அனுசுயா, தனது கணவரை இழந்துவிட்ட நிலையில், தான் திருவல்லிக்கேணி, வெங்கட்ரங்கம் தெருவில் உள்ள வாடகை வீட்டில் தனது மகனுடன் வசித்து வந்த நிலையில், 2013ம் ஆண்டு தனது மகன் சத்யநாராயணன் என்பவர் வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு மும்பை சென்றுவிட்டதாகவும், இதனால் கடந்த 10 ஆண்டுகளாக தான் மேற்படி வீட்டில் தனியாக வசித்துக் கொண்டு அவதிப்பட்டு வருவதாகவும், தனது மகனை கண்டுபிடித்து, சென்னைக்கு வரவழைத்து வயதான தன்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும்படி அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

உடனே காவல் ஆணையாளர், மேற்படி மூதாட்டியிடம் நீங்கள் கவலைப்படாமல் வீட்டிற்கு செல்லுங்கள், காவல்துணை ஆணையாளர் உங்களை நேரில் வந்து பார்த்து உங்கள் குறைகளை கேட்டு தீர்த்து வைப்பார் என ஆறுதல் கூறி, காவல் வாகனத்தில் மூதாட்டியை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டார். அதன்பேரில் மூதாட்டி அனுசுயா, காவல் வாகனத்தில் காவலர் உதவியுடன் அழைத்துச் செல்லப்பட்டு பத்திரமாக வீட்டில் சேர்க்கப்பட்டார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன்பேரில், திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், திருவல்லிக்கேணி உதவி ஆணையாளர் எம்.எஸ்.பாஸ்கர், காவல் ஆய்வாளர், பெண் உதவி ஆய்வாளர் ஆகியோருடன் இன்று காலை, மூதாட்டி அனுசுயாவின் வீட்டிற்கு நேரில் சென்று மூதாட்டிக்கு பழக்கூடைகள் வழங்கி, ஆறுதலாக பேசி, குறைகளை கேட்டறிந்தார்.

விசாரணையில், மூதாட்டி அனுசுயாவிற்கு 3 மகன்கள் உள்ள நிலையில், 2 மகன்கள் எங்குள்ளனர் என தெரியவில்லை எனவும், சத்யநாராயணன் என்ற மகன் மட்டும் அனுசுயாவுடன் வசித்து வந்த நிலையில், சத்யநாராயணன் 2013ம் ஆண்டு வீட்டிலிருந்த பணம் ரூ.10,000/-ஐ எடுத்துக் கொண்டு மும்பை சென்று அங்கு வசித்து வருவதாகவும், தான் மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வருவதாகவும், தனது மகனை தன்னுடன் சேர்த்து வைத்து தன்னை கவனித்துக் கொள்ள அறிவுரைகள் வழங்கும்படியும் கூறினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் நேரில் உதவி கேட்ட மூதாட்டி.. உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறை !

உடனே, துணை ஆணையாளர் அவர்கள் நிச்சயமாக ஒரு மாதத்திற்குள் தங்களது மகனை கண்டுபிடித்து தங்களுடன் சேர்த்து வைப்பதாகவும் உறுதி அளித்தார். மேலும், முதியோர் காப்பகத்தில் சேர்த்து தங்களை கவனித்துக் கொள்ள ஏற்பாடு செய்கிறேன் என கேட்டதற்கு மூதாட்டி முதியோர் இல்லத்தில் தங்குவதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்து, தன் வீட்டிலேயே வசித்து தானே சமைத்து சாப்பிட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் மூதாட்டியின் மகன் சத்யநாராயணனுக்கு தற்போது 60 வயதுக்கு மேல் உள்ளது என்பதும், மும்பையில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்து வருவதும் தெரியவந்ததால், மும்பையில் உள்ள சத்யநாராயணனை கண்டுபிடிக்கவும், அவரது செல்போன் எண்ணை கண்டறிந்து பேசவும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். மேலும், மூதாட்டி தற்போது வசிக்கும் வீட்டில் மூத்த குடிமக்களை கண்காணிக்கும் பட்டா புத்தகம் வைக்கப்பட்டு தினசரி ரோந்து காவலர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று குறைகள் கேட்டறிந்து உதவிகள் செய்யவும், மூதாட்டியின் செல்போன் எண்ணை பெற்று தினசரி அவருடன் பேசி குறைகள் இருந்தால் தெரிவிக்கவும் உதவி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும், அவசர உதவி தேவைப்பட்டால் காவல் துறையினரை அழைக்க, காவல்துணை ஆணையாளர், உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளரின் பெயர் மற்றும் செல்போன் எண்களை எழுதிக் கொடுத்து அவசர உதவி தேவைப்படுமபோது, அழைக்க காவல் துணை ஆணையாளர் அவர்கள், மூதாட்டியிடம் அறிவுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories