36 ஆண்டுகள் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்தவர் முரசொலி மாறன். அண்ணா நின்று வென்ற தென் சென்னைத் தொகுதியில், அண்ணா அவர்களாலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் முரசொலி மாறன்.
சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அமைச்சரவையிலும், தேவே கௌடா –குஜ்ரால் அமைச்சரவைகளிலும், வாஜ்பாய் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பணியாற்றி தமிழ்நாட்டிற்காகவும், இந்தியா எனும் நமது தேசத்திற்காகவும் அளப்பரிய மதிப்பீடுகளைத் தேடிக் கொணர்ந்து குவித்திருக்கிறார் முரசொலி மாறன்.
தமிழ்நாட்டிற்காக பல்வேறு திட்டங்களை ஒன்றிய அரசு வழியாக செயல்படுத்திய முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் அவர்களின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரை சிலைமானில் முரசொலி மாறன் அவர்களது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாளெல்லாம் நம்மை இயக்கிடும் நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் மனச்சாட்சியென வாழ்ந்திட்ட முரசொலி மாறன் அவர்களது 90-ஆவது பிறந்தநாள் இன்று!
மதுரை சிலைமானில் தலைவர் கலைஞர் அவர்களால் 1952-இல் திறந்து வைக்கப்பட்ட கழக அலுவலகத்தில், மரியாதைக்குரிய முரசொலி மாறன் அவர்களது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
கொள்கைக் கருவூலமான முரசொலி மாறன் அவர்கள் எழுதிய மாநில சுயாட்சி நூல் அனைவரும் படித்திட வேண்டிய ஒன்று! முரசொலி மாறன் அவர்களது புகழ் போற்றுவோம்! அவரது கருத்துகளை இளைய சமுதாயத்துக்குப் பயிற்றுவிப்போம்!" என தெரிவித்துள்ளார்.
அதேபோன்று சென்னை முரசொலி அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.