நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் நாங்குநேரியைச் சேர்ந்த பட்டியல் இன 12-ம் வகுப்பு மாணவனுக்கும் அதே பள்ளியில் படித்து வரும் மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை, சாதிய ரீதியான பிரச்சனையாக மாறியுள்ளது.
நாங்குநேரி பகுதியில் உள்ள பட்டியலின மாணவரின் வீட்டிற்குள் புகுந்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் சர மரியாக வெட்டிய சம்பவத்தில் 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பனிரெண்டாம் வகுப்பு மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து அந்த மாணவரின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.
அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது. பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களான அண்ணன், தங்கை மற்றும் அவரது குடும்பத்தினரை சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர்.
பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவனின் உடல் நலம் விசாரித்தார். மேலும் அவரது தயார் அம்பிகாபதியிடம் தொலைப்பேசி மூலம் நலம் விசாரித்தார். அப்போதுசின்னத்துரையின் தாயார் அம்பிகாபதியிடம் பேசிய முதலமைச்சர், “ எதற்கு கவலைபடாதீங்க அரசு உங்களுடம் இருக்கும்”என நம்பிக்கை அளித்தார்.