இந்தியாவின் முன்னணி கார் நிறுவனந்தமாக உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் அதிக கார்களை விற்பனை செய்து ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்தது வருகிறது. மேலும், உலகளவிலும் தங்கள் கார்களை ஏற்றுமதி செய்தும் வருகிறது.
இப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் சாலை விதிமுறைகளை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கடந்த 5 ஆண்டுகளாக #BeTheBetterGuy ( Buckle up, Young India ) எனும் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறது.
அந்த வகையில், தற்போது கலைஞர் செய்திகள் நிறுவனத்தோடு இணைந்து இந்தாண்டுக்கான #BeTheBetterGuy விழிப்புணர்வு பிரசாரத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஃபவுண்டேஷன் மேற்கொண்டுள்ளது. அதன்படி, சாலைகளில் நடந்து செல்லும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், வாகனங்களில் செல்வோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விதிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் வலியுறுத்தப்படுகிறது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி, மதுரை போன்ற இடங்களிலும் போக்குவரத்துக்கு போலீசாருடன் இணைந்து இந்த விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே இது குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை ஹூண்டாய் மோட்டார் நிறுவனமும் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியும் சேர்ந்து வெளியிட்டுள்ளது. 'தலைக்கவசம், உயிர்க்கவசம் யோசிச்சி பாரு ஒரு நிமிடம்' என தொடங்கும் அந்த பாடலில் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும் அதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, தலை கவசம் அணிவது, காரில் சீட் பெல்ட்டை அணிவது போன்ற விழிப்புணர்வுகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சாலை சிக்னல்களை பின்பற்றுவது, முறையான ஆவணங்களை உடன் கொண்டுவருவது போன்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு வீடியோவில் கலைஞர்களுடன் பொதுமக்களும் பங்கேற்றனர்.