சென்னையில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் கோப்பை என்ற விளையாட்டுப் போட்டியினை அறிவித்து, அதில் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகள் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என அறிவித்திருந்தார்
அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 3.70 லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 27000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் 17 இடங்களில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 25-ம் தேதி வரை 'முதலமைச்சர் கோப்பை' மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு நடந்து வந்தது.
இந்த நிலையில், தற்போது இந்த போட்டிகளில் அதிக வெற்றிகளை பெற்ற மாவட்டங்கள் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் எவ்வளவு தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி 61 தங்கம், 32 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தம் 112 பதக்கம் பெற்று சென்னை முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
மேலும் 17 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 52 வீரர்கள் பதக்கம் பெற்று செங்கல்பட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து 15 தங்கம், 13 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 52 வீரர்கள் பதக்கம் பெற்று கோயம்பத்தூர் மூன்றாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.