செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அமைந்துள்ளது மாந்தோப்பு. இங்கு தனது குடும்பத்துடன் டேனியல் என்ற 23 வயது இளைஞர் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் நேற்றும் வழக்கம்போல் இவரது குடும்பத்தில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மன ஆறுதலுக்காக பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள தனது நண்பன் மணிகண்டன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கே மணிகண்டனும் இவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து முதல் மாடியில் வைத்து மது அருந்தியுள்ளார் இளைஞர் டேனியல். இதையடுத்து தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக நண்பரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. எனவே முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய கீழே குதித்துள்ளார்.
அப்போது அருகில் இருந்த உயர் மின் அழுத்த கம்பிகளுக்கு இடையே சிக்கிய டேனியல் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். டேனியல் கீழே குதித்ததை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பதறியடித்து இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மின்சார துறையினர் மூலம் உடனடியாக மின்சாரமும் நிறுத்தப்பட்ட நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் டேனியலை மீட்டு தீயனைப்பு வாகனத்தின் மீதே சி.பி.ஆர் சிகிச்சை கொடுத்து உயிரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் டேனியல் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசுக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலை செய்வதற்காக தனது நண்பன் வீட்டு மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயர் அழுத்த மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது தாம்பரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!