சென்னை போரூரில் ஐ.டி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு இடங்களில் இருந்தும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில் அங்கு பணி புரியும் பெண் ஒருவர் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு பல்வேறு ஆண்களிடம் ஆபாசமான சாட்டிங் செய்யப்பட்டு வந்தது. மேலும் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து ஷேர் செய்யப்பட்டிருந்தது.
இப்படி அதிகமான இளைஞர்களுக்கு இந்த முகநூல் கணக்கில் இருந்து ஷேர் செய்யப்பட்டதை ஒரு நாள் அந்த இளம்பெண் பார்த்துள்ளார். மேலும் அந்த ஐடியில் இருந்து அவரது அலுவலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ந்து போன அந்த பெண் இதுகுறித்து சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில் அதே அலுவலகத்தில் பணிபுரியும் என்ஜினீயர் தமிழ்மாறன் என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்மாறனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அதில் 100-க்கும் மேற்பட்ட IT பெண் ஊழியர்களின் புகைப்படங்கள் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் இவரே பெண் பெயரில் போலியாக உருவாக்கப்பட்ட கணக்கில் இருந்து மற்ற ஆண்களுடன் ஆபாசமாக சாட்டிங் செய்து வந்ததுள்ளார். அதோடு தன்னுடன் பணிபுரியும் சக பெண் ஊழியர்களை ஆபாச கோணத்தில் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.
தொடர்ந்து இந்த புகைப்படங்களை அவருடன் பணியாற்றும் பெண்களை மிரட்டி எடுத்துள்ளாரா அல்லது தெரியாமல் எடுத்தாரா என்றும், அவர் யாருக்கேனும் விற்று பணம் சம்பாதித்தாரா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.