விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.07.2023 அன்று அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் விலைவாசி உயர்வு தொடர்பாக நடத்திய ஆய்வுக் கூட்டத்தினைத் தொடர்ந்து என் தலைமையிலும் தலைமைச் செயலாளர் முன்னிலையிலும் விலைக் கட்டுப்பாட்டு குழுக் கூட்டம் 11.07.2023 அன்று நடைபெற்றது.
முதலமைச்சர் அவர்களும் ஒன்றிய வர்த்தகம் & தொழில் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகத் திட்டம் மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாட்டிற்கு மாதம் ஒன்றிற்கு 10,000 மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 10,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்திடக் கோரி கடிதம் எழுதியிருந்தார்.
விலைவாசி உயர்வினைக் கட்டுப்படுத்தும் விதமாக, உடனடியாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2023 மாதங்களுக்குத் தேவையான 40,000 மெ.டன் துவரம் பருப்பு 464.79 கோடி ரூபாய்க்கும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2023 மாதங்களுக்குத் தேவையான 5.10 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் 463.48 கோடி ரூபாய்க்கும் மொத்தம் ரூ.928.27 கோடி மதிப்பில் கொள்முதலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டலக் கிடங்குகளிலும் இறக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தக் கிடங்குகளிலிருந்து நியாயவிலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்குத் தங்குதடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தக்காளி விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க நியாயவிலைக் கடைகள் மூலமாக தக்காளி கிலோ ஒன்றிற்கு 60 ரூபாய் விலையில் வழங்கப்பட்டுவருகிறது. இன்று முதல் சென்னையில் ஏழு அமுதம் அங்காடிகளிலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் ஏழு நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி கிலோ ஒன்றிற்கு 60 ரூபாய்க்கும் துவரம் பருப்பு அரை கிலோ 75 ரூபாய்க்கும் உளுந்தம் பருப்பு அரை கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.
இதற்குத் தமிழ்நாடு அரசால் பராமரிக்கப்பட்டு வரும் விலைக் கட்டுப்பாட்டு நிதி பயன்படுத்தப்படுகிறது. கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்களும் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு அங்காடிகள் மூலமாக துவரம் பருப்பைக் கொள்முதல் விலையில் விற்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத்துறை மூலமாகவும் இன்றியமையாப் பொருள்கள் பதுக்கப்படாமலிருக்கவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படாமலிருக்க மேற்குறிப்பிட்டவாறு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.