புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கரம்பக்காடு இனாம் என்ற கிராமம் உள்ளது. இங்கு சாகுல் ஹமீது (49) என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் தொழில் செய்துவிட்டு, தற்போது கார் வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு சார்லஸ் நகரில் வசிக்கும் முருகானந்தம் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் பாஜக பொருளாளராக இருக்கும் முருகானந்தத்துக்கு தொழில் நிமித்தமாக பணத்தேவை இருந்துள்ளது. எனவே, சாகுலிடம் கடந்த 2017-ம் ஆண்டு இரண்டு தவணைகளாக ரூ.60 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். குறிப்பிட்ட நாளில் திருப்பி கொடுத்து விடுவதாக கூறிய அவர் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
எனவே சாகுல் ஹமீது, முருகானந்தத்திடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். இதனால் இருவருக்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முருகானந்தம், சாகுல் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது சாகுலின் மதத்தை குறிப்பிட்டு இழிவாக பேசிய முருகானந்தம், அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சாகுல் காவல்துறையில் புகார் மனு அளித்தார்.
அதன்பேரில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக நிர்வாகி முருகானந்தம் மீது கீரமங்கலம் போலீசார் மோசடி, மதரீதியாக இழிவுபடுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடனாக பெற்ற 60 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காமல், கொலை மிரட்டல் விடுத்த புதுக்கோட்டை பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.