தமிழ்நாடு

”ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்”.. ஒன்றிய அரசுக்கு தொல். திருமாவளவன் வலியுறுத்தல்!

தமிழ்நாடு ஆளுநரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

”ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்”.. ஒன்றிய அரசுக்கு தொல். திருமாவளவன்  வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒருவருக்கு இருக்க வேண்டிய நிதானமும், மாண்பும், அரசியல் சட்டத்தை மதிக்கும் பண்பும் ஆர்.என். ரவி அவர்களிடம் இல்லை. தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டுவருகிற அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம் என தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் 164 இல் ஒரு அமைச்சரை நியமிக்கவும், அவரது துறையை மாற்றவும், அவரைப் பதவி நீக்கம் செய்யவும் முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பரிந்துரையின் படி ஆளுநர் அதை அறிவிக்க வேண்டும். ஆளுநரின் அதிகாரம் அவ்வளவுதான். இதற்கு மாறாக ஆளுநரே ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வது இந்தியாவில் முதன்முறையாக அரங்கேறியுள்ள கேலிக்கூத்தாகும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில் எத்தனையோ மாநில அரசுகள் ஒன்றிய அரசால் கலைக்கப்பட்டிருக்கின்றன. அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 356 ஐப் பயன்படுத்தி விருப்பம் போல மாநில அரசுகளைக் கலைப்பதற்கு உச்சநீதிமன்றம் 1994 ஆம் ஆண்டு எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் பல தடைகளை விதித்தது. அதன் பிறகு அப்படி மாநில அரசுகளைக் கலைப்பது குறைந்து விட்டது.

”ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்”.. ஒன்றிய அரசுக்கு தொல். திருமாவளவன்  வலியுறுத்தல்!

இந்தியா சுதந்திரமடைந்து இந்த 75 ஆண்டுகளில் மாநில அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தாலும் ஒரு மாநில அமைச்சரை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ததாக எந்த முன்னுதாரணமும் கிடையாது. ஏனென்றால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லை. இதுவரை முன்னுதாரணம் இல்லாத ஒரு நடவடிக்கையை ஆளுநர் மேற்கொள்ளும் போது அதற்குரிய சட்ட ஆலோசனைகளை அவர் பெற்றிருக்க வேண்டும். ஒன்றிய அரசைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும். இது எதையும் செய்யாமல், அரசியலமைப்புச் சட்டத்தைப்பற்றிய புரிதலும் இல்லாமல் ஆர்.என்.ரவி அவர்கள் எடுத்த நடவடிக்கை இப்பொழுது ஒன்றிய அரசுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது.

ஆளுநரின் நிதானமற்ற அணுகுமுறையைக் கண்டு ‘இவர் சீரான மனநிலையில் தான் இருக்கிறாரா?’ என்று ஐயப்படுகின்றனர். இத்தகைய தன்மை கொண்ட ஒருவரை ஆளுநர் போன்ற அரசியலமைப்புச் சட்ட முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் நீடிக்க விடுவது இந்திய நாட்டுக்கே கேடாக முடியும்.

”ஆளுநரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்”.. ஒன்றிய அரசுக்கு தொல். திருமாவளவன்  வலியுறுத்தல்!

எனவே, ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், இனிமேல் ஆளுநர்களை நியமிக்கும் போது 'பூஞ்சி கமிஷன்' அளித்துள்ள பரிந்துரையின்படி மாநில முதல்வர்களைக் கலந்தாலோசித்து நியமிக்க வேண்டும் என்றும் ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்துகிறோம்.

ஆளுநரின் நடவடிக்கையால் எழுந்துள்ள சட்டரீதியான பிரச்சனையை, குறிப்பாக,அரசமைப்புச் சட்டத்தைச் சிக்கலுக்குள்ளாக்கும் நிலையை, நீதிமன்றம் மூலம் எதிர்கொள்வதோடு, ஆர்.என்.ரவி அவர்கள் விடுத்துள்ள அரசியல் ரீதியான சவாலை மக்கள் மன்றத்தில் எதிர்கொள்வதற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories